காந்தியும் விவேகானந்தரும்
வெ. சாமிநாத சர்மா
1. காந்தியும் விவேகானந்தரும்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. அணிந்துரை
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. பதிப்புரை
6. நுழையுமுன்…
7. பிரசுராலயத்தின் வார்த்தை
8. முந்தைய பதிப்பின் பதிப்புரை
2. ஐம்பது வருஷங்களுக்கு முன்
3. இளமையில் இருவரும்
4. இருவரும் மகான்கள்
5. விவேகானந்தர் ஏன் அமெரிக்கா சென்றார்?
6. காந்தி ஏன் ஒரு விவசாயி?
7. இரண்டு சக்திகள்
8. மனிதனாயிரு!
9. தொண்டு செய்!
காந்தியும் விவேகானந்தரும்
வெ. சாமிநாத சர்மா
மின்னூல் உரிமம்
இந்த மின்னூலானது தமிழ்மண் பதிப்பகம், கணியம் அறக்கட்டளை, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.
மூல நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பிரகடனத்தின் கீழ் பொதுவுடமையாக உள்ளன.1 இப்பதிப்பும் இதன் மூலங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் - படைப்பாக்கப் பொதுமம் குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் 4.02 உரிமத்தின் கீழ் பல்வேறு வடிவங்களில் தமிழ்மண் பதிப்பகத்தினாலும் கணியம் அறக்கட்டளையினாலும் வெளியிடப்பட்டுள்ளன.
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf என்ற இணைப்பில் காணவும்.
This ebook is the product of collaboration between ThamizhMann Publisher, Kaniyam Foundation and UTSC Library’s Digital Tamil Studies project.
The original works are under public domain through the Tamil Nadu nationalized books public domain declaration.1 This edition and its sources and multiple formats have been released under Creative Commons Attribution Share Alike 4.0 Unported2 by ThamizhMann Publisher and the Kaniyam Foundation.
For further information, please see: http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : காந்தியும் விவேகானந்தரும்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 2
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 20 + 212 = 232
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 145/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017, தொ.பே. 2433 9030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம்,
சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி.க. மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடு களின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதிய வரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர் களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக் கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய் மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர் களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலை முறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
மோதிலால் நேரு
- பண்டித நேருவின் தந்தை. வீரத்தின் விளைநிலம். தியாகத்தின் திருவுருவம். காந்தியடிகளையும், நேருவையும் வெளிஉலகுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைக் குரியவர். இந்திய விடுதலை வரலாற்றை வளர்த்தெடுத்து பண்படுத்தியவர்களில் இவரின் பங்கு அளப்பரிது.
- இந்திய விடுதலை இயக்கத்திற்கு மூளையாகத் திகழ்ந்தவர். இந்திய அரசியல் வாழ்வில் தோன்றிய அரசியல் விற்பன்னர் களில் முதன்மையானவர். ஏற்றுக் கொண்ட இலக்கிற்கு உருவமும், அழகும் கொடுத்தவர். தனது அழகு மாளிகை யாம் ஆனந்த பவனத்தை இந்திய விடுதலை வேள்விக்கு ஈகம் செய்தவர்.
- இளமையில் செல்வ செழிப்பில் வாழ்ந்த சீமான். முதுமையில் இந்திய நாட்டின் விடுதலை வேள்விக்குத் தன்னையும் தன் குடும்பத்தையும் ஒப்புவித்தவர்;
- சீரோடும் செல்வச் செழிப்போடும் கூடிய வாழ்வை உதறித் தள்ளியவர். தரையை மெத்தையாகவும், கையைத் தலை யணை யாகவும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.
- பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த இந்தியத் தலைவர் களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இன்னும் என்ன? உள்ளே படியுங்கள்; உள்ளத்தை உருக்கும் செய்தியை நெஞ்சில் நிறுத்துங்கள்.
- இந்திய விடுதலை என்னும் இலக்கை அடைவதற்கு இளையருக்கும், முதியவர்க்கும் சிறந்த அணுகுமுறையைக் காட்டிச்சென்ற தொலை நோக்குச் சிந்தனையாளர்.
- இந்திய விடுதலையாளர்களின் பார்வையில் சிற்பியாய்ப் போற்றிப் புகழப்பெற்றவர்.
- சேர்த்த பெரும் செல்வத்தை நாட்டுக்காக செலவிட்டவர். தம் அருமருந்தன்ன ஒரே மகனாம் பண்டித நேருவையும், தம் குடும்பத்தையும் நாட்டுக்காக விட்டுச் சென்றவர்.
- உள்ளும் புறமும் ஒத்த சிந்தனையாளரின் உறுதியையும், அஞ்சாநெஞ்சம் உள்ள பெருமகனின் அருங்குணங்களையும் படியுங்கள்; படிப்பினைப் பெறுங்கள்.
பாலகங்காதர திலகர்
- சுய ஆட்சி எனது பிறப்புரிமை; அஃதெனக்கு வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் விடுதலை விதையை ஊன்றியவர்.
- மராட்டிய மண்ணில் பிறந்த இவர். இந்திய விடுதலைப் போருக்கு அணிகலனாக இருந்து அழகு சேர்த்தவர். மராட்டிய மண்ணில் இந்திய விடுதலைப் போருக்காகப் போராடி மடிந்த வீரமறவர்கள் பற்றி விழாக்கள் எடுத்து விடுதலைப் போருக்கு உணர்ச்சியூட்டி இளங்காளை களைப் போருக்குத் தூண்டியவர்.
- மராட்டிய மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டியவர். பகட்டு ஆரவாரம் அற்றவர். மாந்தப் பிறப்பின் நோக்கம் பிறருக்கு உதவு வதற்கே என்ற மனப்போக்கு உடையவர்.
- இளமைத்தொட்டு நாட்டுப்பற்றும் இந்துசமயப்பற்றும் மிக்கவராய் இருந்தவர். கணிதத்தில் பேரறிவு பெற்றவர்.
- இந்தியர்கள் மேன்மையுற ஒழுக்கக் கல்வியை அறிவுறுத் தியவர். உழைப்பாளிகளின் தலைவர்.
- போர்க் குணம் மிக்க தலைவர்களுள் ஒருவர். தம் வாழ்நாள் முழுவதும் அந்நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தவர்.
- இந்தியா முழுவதும் - தமிழகத்தில் பாரதியார் உட்பட ஒரு பெரும் அறிவுப் பட்டாள இளைஞர்களை இந்திய விடுதலை வேள்விக்காகச் செதுக்கியவர்.
- தலை சிறந்த இதழாளர்; பாடம் சொல்லிக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்; சமசுகிருத மொழியாராய்ச்சி யாளர்; சட்ட நுணுக்கங்களை இந்திய வழக்குரைஞர் களுக்குக் கற்றுத் தந்தவர்.
- இந்திய விடுதலை வரலாற்றில் திலகரின் இடம் பெரிது. அதை இந்தச் சிறிய நூல் அழகு மணிகளாகத் கோத்துத் தருகிறது.
- திலகரின் வீர வாழ்க்கை என்ற அணையா விளக்கை நூலுள் சென்று காணுங்கள் - படியுங்கள்.
காந்தி யார்?
- காந்தி - அவர் ஒரு ஞானிபோலிருக்கிறார். ஆனால் உலகமெல்லாம் அவருக்கு குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும் பொருளும் வேண்டு மென்று பிச்சை கேட்கி றார், ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான ஏழை மக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக்கணக்கானவர் களுடைய நிரந்தர உபவாசத்தை தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர் களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்று கோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்குத் தாம் ஓர் ஊன்று கோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப் படுகிறார். ஆனால் அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத்தான் வணங்குகிறார்.
- இந்திய மக்களுக்குத் தந்தையாக இருந்து இந்திய விடுதலைப் போரை வென்றெடுத்தவர் மகாத்மா காந்தி. இந்தப் பெயர் இன்று உலகெங்கும் போற்றிப் புகழப் பெறும் பெயராக உள்ளது.
- வீரர்களுக்கும், மகான்களுக்கும் உள்ள திண்மையும், தண்மையும் காந்தியடிகளிடத்து மிகுந்து காணப்படுகிறது.
- தம்மைச் சுற்றியிருந்த எளியமாந்தர்களையும், வீரர்களாக வும் மகான்களாகவும் ஆக்கிய வியக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்.
- இந்தியப் பெரு நிலத்தின் அரசியல் ஆசான் கோகலே அவர்களால் காந்தியடிகள் என்று புகழப் பெற்றவர்.
- நாட்டின் நலனில்தான் தம் நலன் அடங்கி இருக்கிறது என்பதைப் பலமுறை தம் செயல்களால் காட்டியவர்.
- உலக நாடுகளில் நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத் திற்குக் காந்தியடிகள்தான் முதன்மையானவர் என்று இந்நூல் பதிவு செய்கிறது.
- தாய்மொழி மூலம்தான் ஒருநாட்டின் பெருமையையும், தன் மதிப்பையும் உயர்த்திக்காட்ட முடியும் என்பதில் காந்தியடிகள் அழுத்தமாக இருந்தார் என்பது தெரிகிறது.
- இவருடைய வாழ்க்கை வீர வாழ்க்கை; விதியை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை; வலிமைப்படைத்த ஆங்கில வல்லாண்மையை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை.
மாந்தத் தன்மையின் உச்சியில் இருந்தவர். ஒழுக்கம் இவரின் உயர்நிலைக்கு அடித்தளம்.
- தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையை உயிரினும் மேலாகக் கொண்டவர். அதற்காக உழைத்தவர்.
- தம் பொது வாழ்க்கையில் கொள்கைகளுக்கு மாறாக குடும்பம் இருந்தால் குடும்ப உறவையே துண்டித்துக் கொள்ளும் அளவிற்கு மனஉறுதி உடையவராகத் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டவர்.
- பாமரமக்களையும் அரசியலுக்குக் கொண்டு வந்து அவர் களுக்கும் அரசியலில் உரிமை உண்டு என்பதை இந்திய நாட்டு மக்களுக்குக் கண்டு காட்டியவர்.
- வெளிநாட்டுப் பொருள்களைப் புறம்தள்ளி, உள்நாட்டுப் பொருள் களுக்கும், உள்நாட்டுத் தொழில்களுக்கும் முன்னுரிமை அளித்தவர்.
- இந்திய மக்களுக்கு அச்சம் விலக்கி அரசியல் உணர்வு களைத் தூண்டியவர்.
- உறங்கிக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி உலக அரசியல் அரங்கில் ஒளிவிட வைத்தவர்.
- காந்தியின் வாழ்க்கை வளமுடைய அகன்ற காவிரி. நட்ட நாற்று ஒவ்வொன்றும் ஆற்று நீர்ப் பாய்ச்சலால் ஓராயிரம் நெல்மணி களைக் கொண்டுவருவதைப்போல, காந்தி போன இடமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய விடுதலைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர்.
- மாந்தனின் வரலாறு மகானின் வரலாறாகப் மாறிய தெப்படி? படிப்பதற்காக - பாதுகாப்பதற்காக இந்நூல் உங்கள் கைகளில்!
காந்தி - சவகர்
- சவகர்லால் நேரு, மோதிலால் நேரு பெற்றெடுத்த பெருமகன்; இந்தியப் பேரரசின் முதல் தலைமை அமைச்சர்.
- இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அடித்தளம் அமைத்தவர்; விடுதலைப்பெற்ற இந்தியாவின் முதல் அரசியல் சிற்பி. காந்தியடிகள் ஒரு வித்து-வித்திலிருந்து தோன்றிய முளை சவகர்லால் நேரு.
- இருவரும் ஆங்கில வல்லாண்மையின் சட்டத்தை மீறிய வர்கள். இருவரும் சட்ட வல்லுநர்கள். இருவரும் ஈகத் தீயில் வெந்தவர்கள். இருவரும் அன்னையரின் வளர்ப்பால் பொதுவாழ்வில் புடம் இட்ட பொன்னாகத் திகழ்ந்த வர்கள். காந்தியடிகள் நீறு பூத்த நெருப்பு-சவகர்லால் நேரு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு.
- இருவரும் இந்திய நாகரிகத்தின் உண்மைத் தொண்டர்கள். இவ்விருவரின் மனைவியரும் கணவன்மார்களின் முன் னேற்றத்திற்குத் துணை இருந்தவர்கள்; துன்பங்களைத் தூக்கிச் சுமந்தவர்கள்.
- தம் சொந்தத் துன்பங்களை மறந்து நாட்டு மக்களின் விடிவிற்கு இவர்கள் விதைத்த விதைதான் இன்றளவும் இந்தியப் பெருநிலத்திற்குக் குன்றாத பெருமையைத் தந்து கொண்டுள்ளது.
- நைனிடால் சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு சவகர் எழுதிய கடிதம் உலக வரலாற்றில் இடம் பெற்றது. தமிழில் இவரின் கடிதங்கள் இந்திய சரித்திரம் எனும் நூலாக வெளிவந்துள்ளது. வளரும் இளந்தமிழ் மறவர்கள் படிக்க வேண்டிய உலக வரலாற்றுப் பெட்டகம்.
- கத்தூரிப்பாயின் கணவர், இந்திராவின் தந்தை என்ற தொடர்களின் மூலம் காந்திக்கும் நேருவுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டியுள்ளார் ஆசிரியர் சர்மா. மேலும் படியுங்கள்.
- பொன்னைத் தொட்ட கை; இந்திராவைத் தூக்கிச் சுமந்த இனிய தோள்; கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு மண் வெட்டிய கைகள் என்ற தொடர்கள் நேருவின் பெருமைக்குப் புகழ் சேர்க்கும் வரிகளாகும்.
- சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு முழக்கங்கள் தொடர்பான வற்றிலும் குமுகாயக் கொடுமைகளைக் களைவதிலும் இருவருக்கும் உள்ள வழிமுறை களும் வேறு வேறானவை என்பது இந்நூல் வழி அறியும் செய்தி யாகும்.
- வாழ்க்கையில் இருவரும் குருதியும், குருதி நாளமுமாகத் திகழ்ந் தார்கள். தலைமைப் பண்பாளர்களாதலால் தம் கருத்து வேற்றுமையால் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது வாழ்ந்தார்கள்.
- அதனால்தான் இன்றைக்குக் காந்தியச் சிற்றூரும் இருக்கிறது. நேருவின் கனவாம் தொழில்நுட்ப பெரு வளர்ச்சியும் இருக்கிறது.
- இந்நூல் இருவரின் பண்புகளையும் துலாக் கோலின் இரு தட்டு களிலும் கலைநயத்தோடு நிறுத்து துல்லியமாக அளவிடுகிறது.
- விடுதலை வெளிச்சமில்லாத ஒரு நாட்டின் மக்கள் வெளி நாடுகளில் எவ்வளவு கீழ்நிலையில் கருதப்படுகிறார்கள் என்ற உள்ளத்தை உறுத்தும் செய்திகள் தமிழர்கள் எண்ணத்தக்கன; சிந்திக்கத்தக்கன.
- பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த தங்கக் கட்டியை ஈகம் என்னும் தீயில் வைத்துச் சுட்டு சவகர் என்னும் அணிகலனாக இந்தியத் தாய்க்குச் சூட்டியுள்ள பொற் கொல்லர் காந்தியின் பெருமையையும், அணியாக அமைந்த சவகரின் பெருமையையும் படியுங்கள். தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டியவை எவை என்பதை நினையுங்கள்.
காந்தியும் விவேகானந்தரும்
- செம்பொன் மேனி, சிறிய உருவம், உடைந்த பல், உரத்த சிரிப்பு, ஒற்றையாடை, மூப்படைந்த இளைஞர், ஓய்வறியா உழைப்பாளி - இவர்தான் காந்தி.
- நெடிய உருவம், அகன்ற நெற்றி, பரந்த கண்கள், ஒளிவீசும் பார்வை, மிடுக்கான நடை, அரசாளவேண்டியவர், ஆனால், துறவாடை அணிந்த துறவி. உலகத்தைத் துறக்காது உலகத்துக்காக வாழ்ந்தவர் இவர்தான் விவேகானந்தர்.
- முன்னவர் கரும யோகி- பின்னவர் ஒரு ஞான வீரர்; முன்னவர் ஒரு காட்டுத் தீ - பின்னவர் பொறிகிளம்பாத அனல் பிழம்பு; முன்னவர் கோடைக்காலத்து இடி- பின்னவர் கார்காலத்து மழை; முன்னவர் உறுமும் அரிமா- பின்னவர் கூவும் குயில்.
- முன்னவர் தொண்டுச் செய்ய பிறந்தவர் - பின்னவர் சமயத்தால் மக்களை ஆளப்பிறந்தவர்; முன்னவர் சிறையைத் புனிதப் படுத்தியவர் - பின்னவர் துறவைப் பெருமைப் படுத்தியவர்.
- இருவரும் அரண்மனைகளில் கொண்டாடப்பட்ட போதும் குடிசையிலேயே வாழ்ந்தவர்கள்.
- இருவரும் இந்திய நாட்டுப் பெருமையைக் காப்பாற்றி யவர்கள்; இருவரும் மேலைநாட்டாரால் பாரட்டப் பட்டவர்கள்.
- முன்னவர் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டவர். பின்னவர் வாழ்க்கையைத் துறந்து சென்றவர். இன்னும் எவ்வளவு ஒற்றுமையும் வேற்றுமையும்! நூலைப் படியுங்கள்.
- முன்னவர் ஒரு வழக்கறிஞர் - பின்னவர் ஒரு துறவி; முன்னவர் இந்தியர்களுக்குத் தன்மதிப்பு உணர்ச்சியை ஊட்டியவர் - பின்னவர் இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.
- முன்னவர் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியலை வெறுத்தவர் - பின்னவர் அரசியல் இல்லா விட்டால் அறவாழ்வு வெற்றிபெறாது என்றவர்.
- இருவரும் இந்து மதப்பற்றாளர்கள். மதம் குமுகாயத்தின் உயர்வுக்கு தேவை என்று விரும்பியவர்கள். ஆனால் இன்று இந்தியாவில் மதவெறியின் கொடுமை அரங்கேறியுள்ளது. இதனை அகற்றுவதற்கு இந்தச் சூழலில் காரல்மார்க்சும், தந்தைப் பெரியாரும் இல்லையே என்ற கவலை மேலோங்கி யுள்ளது.
- விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை என்னும் நிலத்தில் காந்தியடிகள் அமைதி என்னும் விதையை ஊன்றினார். தீண்டாமை என்னும் கொடிய நோயைத் தீர்க்கும் மருத்துவர் களாக இருவரும் இருந்தனர்.
- விவேகானந்தரின் உலகப் பெருமைக்கு இராமநாதபுரம் மன்னர் பாகர சேதுபதியும், காந்தியடிகள் ஒற்றை யாடை அணிவதற்குச் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணும் காரணம் என்பதும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
- கிழக்கில் பேரோசை செய்யும் வங்காள விரிவிகுடா ஓரத்து வங்க மாநிலத்தில் பிறந்த நரேந்திரன் என்ற இயற் பெயருடைய விவேகானந்தர் ஒருபுறம்.
- மேற்கில் அரேபிய குதிரைகளைப் போல பேரலைகளைக் கொண்ட குசராத் மாநிலத்தில் பிறந்த கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயருடைய மகாத்மா மற்றொரு புறம்.
- இப்பொழுது படிப்பாளர்களை இவர்களின் இடையே நிறுத்தி யிருக்கிறது இந்நூல். நூலுள் நுழையுங்கள். இரு பெரும் மா மாந்தர்களை நினைவில் கொள்ளுங்கள்!
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ பெ.சு. மணி,
_ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர்,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன்,
_முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு.,_ ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய்
_மெய்ப்பு_ வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
பிரசுராலயத்தின் வார்த்தை
இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவை களில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கிற ஐந்து அத்தியாயங்களில், கடைசி அத்தியாயம் ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு ஜோதியில் வெளிவந்ததாகும். அவ்வப் பொழுது எழுதிய இந்தத் தலையங்கங்களை வாசகர்கள் படிக்கும் பொழுது ஆசிரியரின் அரசியல் தீர்க்கதரிசனத்தையும் இந்தியாவின் தேவை களையும் உணர சாத்திமாயிருக்குமென நம்புகிறோம்.
காந்தியடிகள் உயிரோடிருந்த காலத்தில் இவை எழுதப் பட்டன வென்பதை நினைவில் கொண்டு இந்நூலைப் படிக்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம்.
முந்தைய பதிப்பின் பதிப்புரை
செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி.
ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்; உலகத்திற்காக வாழ்ந்தார். இவர் விவேகானந்தர்.
இருவரும் பாரத ஜாதியின் பிரதிநிதிகள்; அதன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள்; இந்திய மக்களின் இருதயத்தில் என்றும் வாழ்ந்து கொண் டிருப்பார்கள்.
இந்த நூல், சுவாமி விவேகானந்தருடைய சிகாகோ பிரசங்கத்தின் ஐம்பதாவது வருட நினைவு மலராக வெளியிடப்பெறுகிறது.
11.09.1943
சென்னை சக்தி காரியாலயத்தார்
ஐம்பது வருஷங்களுக்கு முன்
ஐம்பது வருஷங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம். இரண்டு பேர், பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பலேறி னார்கள். கப்பலேறியபோது இவர்களை உபசரித்து வழியனுப்பிய வர்கள் யார்? நெருங்கிய நண்பர் களும் உறவினர்களுமாகிய ஒரு சிலர்தான். இவ்விருவரையும் பற்றிப் பொது ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இந்தப் பெரிய மனிதர் அந்த ஊருக்குப் பயணமானார், அந்தப் பெரிய மனிதர் இந்த ஊருக்கு வந்திறங் கினார் என்று இப் பொழுதைய பத்திரிகைகள் வெளியிடுகின்றனவே, அதைப்போல் அந்தக் காலத்தில் இவ்விருவரும் கப்பலேறியதை எந்தப் பத்திரிகை யும் வெளியிடவில்லை. இவ்விருவரும், எந்தப் பத்திரிகை நிருபர் களுக்கும் பேட்டிகொடுத்து, தாங்கள் போகிற இடங்களில் சாதிக்கப் போகிற காரியங்களைச் சவிதாரமாகச் சொல்லிவிட்டுப் போகவு மில்லை. ஆனால் திரும்பி வந்தபோது இவர்கள் கழுத்திலே எத்தனை மாலைகள் விழுந்தன! என்ன பலமான கைகொட்டு முழக்கம்! இவர்கள் நடக்கிற மாதிரி, பார்க்கிற பார்வை, இவைகளையெல் லாங்கூட பத்திரிகை நிருபர்கள் நுட்பமாகக் கவனித்து எழுதி னார்கள். என்ன மாறுதல் பார்த்தீர்களா?
இவர்கள் போனபோது யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை. திரும்பி வருகிறபோது எல்லோருடைய கவனமும் இவர் களிடமே சென்றது. உலகத்தில் இது சாதாரண சம்பவந்தான் போலும்! ஆலம் வித்து, எப்பொழுது பூமியில் விழுந்தது என்பதை யாரேனும் கவனிக்கிறார்களா? இல்லை. ஆனால் அதுவே பிற் காலத்தில் பெரிய விருட்சமாகிக் கனியும் நிழலும் கொடுத்து உதவு கிறபோது, அந்த விருட்சத்தை அனைவரும் அண்ணாந்து பார்க்கி றார்கள்; சுற்றிச்சுற்றி வருகிறார்கள்; வியந்து வியந்து பாராட்டு கிறார்கள். அதன் நிழலிலேயே இருந்துவிட வேண்டு மென்று கூடச் சிலர் தீர்மானிக்கிறார்கள்!
1893ஆம் வருஷம். மேற்சொன்ன இருவரில் ஒருவர், ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணமானார்; இன்னொருவர், மே மாதம் அமெரிக்காவுக்குப் பயணமானார். ஒருவர், வாழ்க்கையைத் தொடங்கச் சென்றார்; இன்னொருவர் வாழ்க்கையைத் துறந்து சென்றார். முன்னவர், சாதாரண ஒரு பாரிடர்; பின்னவர், சாதாரண ஒரு சந்நியாசி. அப்பொழுது பாரிடர் காந்திக்கு வயது இருபத்து நான்கு; சந்நியாசி விவேகானந்தருக்கு வயது முப்பது. இரண்டு பேரும் பிரமுகர்களல்ல; முன் பின் தெரியாத நாடு களுக்குப் புறப் பட்டார்கள். அந்த நாடுகளிலோ, நிறத் துவேஷம் நிறைய. கறுப்பு நிறத்தவர், காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்; நடத்தவும் பட்டார்கள். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்ற இவர்கள், சிறிது காலங் கழித்துத் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய போது, அந்த நாட்டு மக்களின் பிரியா விடைபெற்றுத் திரும்பினார்கள்: தங்கள் தாய்நாட்டு மக்களின் ஆனந்தக் கண்ணீரினால் அபிஷேகம் செய்யப் பட்டார்கள்.
சென்றார்கள், திரும்பினார்கள் என்று சுருக்கமாக இங்கே சொல்லி விட்டோம். ஆனால் சென்று திரும்பிய இந்த இடைக்காலத்தில் இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! என்னென்ன விதமான அவமானங் களுக்குட் பட்டிருக்கிறார்கள்! ஏன் என்று கேட்கிறீர்களா? எல்லாம் தாய் நாட்டின் பொருட்டே!
காந்தி, தென்னாப்பிரிக்கா போந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. டர்பனிலிருந்து ஜொஹான்னபர்க் என்ற நகரத்திற்கு ஒரு வழக்கு நிமித்தம் போக வேண்டியிருந்தது. எனவே முதல் வகுப்புப் பிரயாணியாக ரெயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். ரெயில், மாரிட்பர்க் என்ற டேஷனை அடைந்தது. அங்கே திடீரென்று ரெயில்வே அதிகாரிகள் தோன்றி, இவரை வண்டியி லிருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள்; இறக்கியும் விட்டு விட்டார்கள். இவருடைய படுக்கை முதலிய சாமான்களெல்லாம் வண்டிக்கு வெளியே வீசி எறியப்பட்டன. வண்டியோ, கூவிக் கொண்டு வேகமாகப் போய்விட்டது. பிளாட்பாரத்திலே ஒண்டி யாக நிற்கிறார் காந்தி. அப்பொழுது இரவு ஒன்பது மணி. குளிர் நடுக்குகிறது. ஊரோ புதிது. பிளாட்பாரத்தில் போவோர் வருவோ ரெல்லோரும் இவரை முறைத்து முறைத்துப் பார்க்கிறார்கள். என்னசெய்வது?
இவ்வளவுக்கும் காரணம் என்ன? ஒரு கூலி1 முதல் வகுப்பில் பிரயாணம் செய்யலாமா வென்பது தான். இங்கிலாந்து சென்று பாரிடர் பட்டம் பெற்றாலென்ன? இந்தியன் இந்தியன்தானே? கூலி பாரிடர் தானே?
காந்தி, சிந்தனையிலாழ்ந்து விட்டார். எனது உரிமைகளுக்காக நான் போராடுவதா? அல்லது இந்தியாவுக்குத் திரும்பி விடுவதா? இந்த அவமானங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல், எந்த வழக்கை உத்தேசித்து வந்தேனோ அந்த வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என்னுடைய கடமையை முடிக்காமல் திரும்புவதென்பது கோழைத்தனம். இங்கே ஆழ்ந்து பரவியுள்ள நிறத் துவேஷம் என்கிற வியாதியின் வெளிச்சின்னந்தான் நான் அனுபவிக்கிற இந்தச் சங்கடம். இந்த வியாதியை அடியோடு தொலைப்பதும் அதற்காகக் கஷ்டங்களை அனுபவிப்பதும் எனது கடமை. இருள் நிறைந்த அந்த இடத்திலிருந்துகொண்டு இவ ருடைய அன்பு நிறைந்த உள்ளம் இந்தமாதிரியாகச் சங்கற்பித்துக் கொண்டது. மறுநாள் ரெயிலேறி சார்ல டவுன் என்ற ஊரை அடைந்தார்.
இதற்குப் பிறகுதான் எத்தனை அவமானங்கள்!
சார்ல டவுனிலிருந்து ஜொஹான்னபர்க்குக்கு ஒரு கோச் வண்டியில் தான் போகவேண்டும். அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. காசு கொடுத்து டிக்கட் வாங்கியிருந்தார் காந்தி. ஆனால் மற்றப் பிரயாணி களுடன் இவர் வண்டிக்குள் உட்கார வைக்கப்படவில்லை. வெள்ளையர் பக்கத்தில் ஒரு கறுப்பன் உட்காரலாமா? எனவே, வழக்கமாக கண்டக்டர் உட்காருகிற இடத்தில், அதாவது வண்டியோட்டுகிறவன் பக்கத்தில், உட்கார வைக்கப்பட்டார். கண்டக்டர் பிரயாணிகளுடன் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டான். வண்டி, சில மைல் தூரம் சென்றது. சென்ற பிறகு, கண்டக்டருக்கு வெளியிலே வந்து, காற்றுவாட்ட மாக உட்கார வேண்டுமென்று ஆசை தோன்றியது. உடனே வண்டியை நிறுத்தி, வண்டியில் ஏறுவதற்குப் படி யிருக்குமே, அந்தப் படியின் மீது அழுக்கடைந்த ஒரு கோணிப்பையைப் போட்டு சாமி! இப்படிவந்து உட்கார் என்று சொன்னான். முடியா தென்றார் காந்தி. அவ்வளவுதான்: கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது. அறைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த துராத்மா, இந்த வருங்கால மகாத்மாவை , கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ள ஆரம்பித்தான். இவரோ, தமது மணிக்கட்டு எலும்புகள் முறிந்து போனாலும் போகட்டுமென்று, வண்டியின் கம்பிகளைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டார். அவன் பலசாலி; முரடன். இவரோ தேகபல மில்லாதவர்; ஆனால் பொறுமைசாலி. இருவருக்கும் நடைபெறுகிற இந்தக் கைப்பிடிச் சண்டையை உள்ளேயிருந்த வெள்ளைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுக்குக்கூட மனம் இரங்கிவிட்டது. காந்தி எங்களுடன் உள்ளே வந்து உட்காரட்டும் என்று சொன்னார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த கண்டக்டர் தோல்வி யடைந்தவன் போலானான்; சண்டை போடுவதை நிறுத்திக்கொண்டான். ஆனால் உன்னை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன் என்று உருட்டி மிரட்டிக் கொண்டே சென்றான். வண்டியும் சென்று கொண்டிருந்தது.
இன்னொரு சம்பவம். அப்பொழுது தென்னாப்பிரிக்கா யூனியன் தலைநகரான பிரிட்டோரியாவில் காந்தி இருந்தார். அங்கே விநோதமான இரண்டு சட்டங்கள் அமுலில் இருந்தன. ஒன்று, இந்தியர்கள், இரவு ஒன்பது மணிக்குமேல் வெளியில் எங்கும் நடமாடக் கூடாதென்பது. மற்றொன்று, ரோட்டுகளின் இருபக்கங் களிலுமுள்ள நடைபாதையின் மீது இந்தியர்கள் செல்லக் கூடாதென்பது. ஒரு நாள், அரசாங்கத் தலைவரான க்ரூகர் என்பவர் வசித்துக் கொண்டிருந்த பிரசிடெண்ட் வீதி என்ற தெருவில் நடை பாதையின்மீது சென்று கொண்டிருந்தார் காந்தி. பிரசிடெண்ட் க்ரூகர் வீடு வந்தது. வீட்டின் முன்புறத்தில் ஒரு காவற் சேவகன் நின்றுகொண்டிருந்தான். இந்தியர்கள் நடைபாதையில் நடந்து செல்லக் கூடாதல்லவா? இவர் நடைபாதையில் வந்து கொண் டிருப்பதை அந்த முரடன் பார்த்தான். அதுவும் பிரசிடெண்ட் வீட்டு முன்னே இப்படிச் சட்டத்தை மீறி நடந்து செல்லலாமா? இவரைக் காலால் எட்டி உதைத்து ரோட்டுக்குத் தள்ளிவிட்டான்! அப்பொழுது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த காந்தியின் ஆங்கிலேய நண்பர் ஒருவர், அந்தக் காவற் சேவகனின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்து, அவன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு காந்தியிடம் கூறினார். காந்தி மறுத்துவிட்டார். அவனுக்கென்ன தெரியும்? பாவம்! எல்லாக் கறுப்பர்களும் அவனுக்கு ஒன்றுதான். என்னுடைய சொந்த அவமானத்திற்குப் பரிகாரந் தேடிக் கொள்ளும் பொருட்டு நான் எந்தக் கோர்ட்டுக்கும் செல்லத்தயாராயில்லை என்றார்.
விவேகானந்தருடைய அனுபவங்களென்ன? அமெரிக்காவைப் போயடைந்த சில நாட்களுக்குப் பிறகு, சர்வதேச சமய மகாநாட்டை முன்னிட்டு ஒருநாள் சிக்காகோ நகரம் சென்றார். சென்ற இடத்தில், மேற்படி மகாநாட்டுக் காரியாலயத்தின் விலாசத்தை எங்கேயோ மறதியாக விட்டுவிட்டார். எனவே, மகாநாட்டின் காரியாலயம் எங்கே, எங்கேயென்று பல இடங்களிலும் தேடியலைந்தார். யாரும் இவருக்குச் சரியான தகவல் சொல்லவில்லை. கறுப்பு மனிதன் தானே? சுயராஜ்ய மில்லாத ஒரு தேசத்தின் மக்கள், அந்நிய நாடுகளில் எவ்வளவு கேவல மாகக் கருதப்படுகிறார்கள் என்பதை இவர் அப்பொழுதே தெரிந்துகொண்டு விட்டார்.
வீதிகள்தோறும் அலைந்தார் விவேகானந்தர். ஹோட்டல்
களுக்குச் சென்று தங்குவதற்கு இடங்கேட்டால், கறுப்பு மனிதனுக்கு இடமில்லையென்பதைச் சொல்லாமல் சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்கள். என்ன செய்வார்? கைகால்கள் சோர்ந்துபோயின. இரவு வந்துவிட்டது. நிறத் திமிர் பிடித்தவர்களுடைய இருதயம் போல் எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. சில்லென்று காற்று வேறே அடிக்கிறது. குளிரோ தாங்க முடியவில்லை. நேரே ரெயில்வே டேஷனுக்குச் சென்றார். அங்கே ஒரு மூலையில் பெரிய காலி மரப்பெட்டி யொன்று இருந்தது. அதற்குள் சென்று படுத்துக் கொண்டார். படுத்ததுதான் தெரியும் இவருக்கு. ஒரே தூக்கம்.
காலையில் எழுந்தார். தேகத்திலே சோர்வு. வயிற்றிலே பசி. மறுபடியும் நகரவலம் வந்தார். ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா வென்று வீடுதோறும் நுழைந்து நுழைந்து பார்த்தார். ஆகாரம் கிடைக்கவில்லை; பரிகாசப் பேச்சுகளும் அவமானங்களுமே கிடைத்தன. சிக்காகோ பட்டணத்திலே, கோடிக்கணக்கில் செல்வம் புரளுகின்ற அந்தக் குபேர புரியிலே, நமது விவேகானந்தருக்கு, உலகத்திலுள்ள சர்வமான பேருடைய வயிற்றுப் பசியை மட்டுமல்ல, ஆத்மப் பசியையும் தீர்த்துவைக்க வேண்டு மென்ற ஒரே லட்சியத் திற்காக வாழ்ந்த மகானுக்கு, ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை; ஒரு துண்டு ரொட்டி கொடுப்பாரில்லை. இந்தியா, அடிமை நாடாயிருப் பதற்கு இந்த ஒரு தண்டனை போதாதா?
கடைசியில், மெய் சோர்ந்து வேறோர் சொல்லும் கூறாமல் பாதையோரமாகப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார் விவேகானந்தர். கடவுளே! இதுவும் உன் திருவுளச் சம்மதமோ என்று இவருடைய தூய உள்ளம் ஏங்கிநின்றது. அப்பொழுது, திடீரென்று, இவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே, ஒரு மாளிகையின் வாயிற்கதவு திறந்தது. அங்கிருந்து ஒரு பெண்ணரசி இவர் அருகே வந்து ஐயா! தாங்கள் சர்வசமய மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆம் என்றார் இவர். உடனே அந்த அம்மையார், இவரைத் தமது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போய் உபசாரம் செய்தார்; ஆகாரம் அளித்தார். அந்த அன்னபூரணி வாழ்க!
இங்ஙனம் இருவரும் அந்நிய நாடுகளில் அநேக விதமான கஷ்ட நிஷ்டூரங்கள் பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களைப்பற்றி நாம் யாரும் நினைக்கக் கூட இல்லை. ஆனால் இவர் களென்னவோ, தங்கள் தாய்நாட்டு மக்களின் நினைவுடையவர் களாகவே இருந்தார்கள்.
ஒரு சமயம், விவேகானந்தருக்கு சிக்காகோ நகரில் ஒரு தனவான் மாளிகையில் ஆடம்பரமான விருந்தொன்று நடை பெற்றது. விருந்தன்று இரவு இவர் அங்கேயே தங்கினார். இவருக் கென்று தனியான அறை, மெத்தென்ற படுக்கை முதலிய எல்லாச் சௌகரியங்களையும் அந்தப் பெரிய மனிதர் செய்துகொடுத்தார். விவேகானந்தரும் அந்த அறைக்குச் சென்று பஞ்சணைமீது படுத்துக்கொண்டார். ஆனால் அஃது இவருக்கு முள் படுக்கையாக இருந்தது. தூக்கமே வரவில்லை. தமது தாய் நாட்டு மக்களின் வறியகோலம் இவர் முன்னே வந்துநின்றது. கண்கள் நீர் பெருக்கின; கதறினார்: தாயே! எனது ஜன்மபூமி, சொல்லொணாத வறுமையிலே அழுந்திக் கிடக்கிறபோது, எனக்குப் பெயர் எதற்கு? புகழ் எதற்கு? இவைகளைப்பற்றி எனக்காவதென்ன? இந்தியாவின் பாமர மக்களை யார் கைதூக்கிவிடப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சோறு கொடுக்கப் போகிறார்கள்? மாதா! அவர்களுக்கு நான் எப்படி உதவி செய்வதென்று எனக்கு வழிகாட்டு.
விவேகானந்தரின் உள்ளம் எந்த நிலையிலே நின்றது பார்த்தீர் களா! இவர் எதற்காக அமெரிக்கா சென்றார்? இவரே, ஒரு கடிதத் தில் காரணங் கூறுகிறார். என்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் இந்த நாட்டுக்கு வரவில்லை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களைக் காப்பாற்றுவதற்கு இங்கே ஏதேனும் வழி ஏற்படுமா வென்று பார்ப்பதற்காகவே வந்தேன். ஆனால் இதை அப்பொழுது - ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் - நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை.
காந்தியும் விவேகானந்தரும் முறையே தென்னாப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற விஷயத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. இருவரும் போகிறபோது, சிறிது காலம் அங்கு தங்கிவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனேயே போனார்கள். ஆனால் விவேகானந்தருக்குத்தான் அது சாத்தியமாயிற்று. காந்திக்கோ, தென்னாப்பிரிக்காவிலேயே சுமார் இருபது வருஷ காலத்திற்கு மேல் நிரந்தரமாகத் தங்கும்படி நேரிட்டது. விவேகானந்தர், வெளி நாடுகளுக்குச் சென்று இந்தியர்களின் பரம்பரைக்கும் நாகரிகத் திற்கும் ஒரு பெருமையை வாங்கிக் கொடுத்தார். காந்தியோ, வெளிநாடுகளுக்கு வயிற்றுப் பிழைப்பு நிமித்தம் சென்றிருந்த இந்தியர்களுக்குத் தன் மதிப்புணர்ச்சியை ஊட்டினார். காந்தி, தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்னர், அங்கிருந்த இந்தியர்கள், அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். இந்தியர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். லட்சக்கணக்கில் பணஞ் சம்பாதித்த வியாபாரிகள் கூட, ‘பணஞ் சம்பாதிக்க வந்த இடத்தில் மானத்தைப் பார்த்தால் முடியுமா? என்கிற மாதிரியாகக் கேட் டார்கள். காந்தியின் மனித உள்ளம் இதைக் கேட்டு வெகுண்டு எழுந்தது. மானமிழந்து வாழாமை முன்னினிதே என்பது சத்திய வாசகமல்லவா? அங்கிருந்த இந்தியர்களின் மானத்தைக் காப்பாற் றும் பொருட்டு முதலில் ஒரு வருஷ ஒப்பந்தத்தின் பேரில் வக்கீலாகச் சென்ற காந்தி, அங்கேயே இருபது வருஷ காலம் தங்கினார். சென்றபோது ஒரு வக்கீலாகச் சென்றார். அங்கே, இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லும் வக்கீலாக வாழ்ந்தார். இந்தியாவுக்குத் திரும்புகிறபோது ஒரு வெற்றி வீரராகத் திரும்பினார்.
காந்தியும் விவேகானந்தரும் வெளி நாடுகளுக்குச் சென்று வெற்றிச் சங்கு ஊதிய பிறகுதான் அவர்களுடைய பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் திரும்பி வந்தபோது ஜே கோஷம் போட்டோம். இதற்கு நமது அறியாமை காரணமென்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வது ஒரு சிலருடைய சம்பிர தாயமும்கூட. ஆனால் உண்மையில் நமது அடிமைத்தனந்தான் காரணம். எந்த ஜாதி, அடிமைக் குழியிலே விழுந்துகிடக்கிறதோ, அது தன்னையே மறந்து கிடக்கிறது. ஆள்வோரின் பாதுகாப்பிலே அது தன் சுய உணர்வை இழந்து கிடக்கிறது. அந்த நிலையிலே, தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணம், அந்நியர் களுடைய நாகரிகத்திலே ஒரு மோகம், எப்பொழுதும் ஒருவித அச்சம், புதுமை போலித்தனம் பகட்டு முதலியவைகளிலே மேலெழுந்த வாரியான ஒரு நம்பிக்கை ஆகிய இந்தத் தன்மைகளெல்லாம் அதனிடத்தில் குடிகொண்டு விடுகின்றன. இவைகளிலிருந்து அந்த ஜாதியைக் கைதூக்கி விட்டு அதற்குச் சுய உணர்வை உண்டுபண்ணுவதென்பது லேசான காரியமா? அந்தக் காரியத்தை யார் செய்ய முடியும்? அயலார் வந்து செய்ய முடியுமா? அயலார், அதிலும் நல்லெண்ணமுடைய வர்கள், எட்டி யிருந்து அநுதாபம் காட்டலாம். ஆனால் யார், அந்த ஜாதியிலேயே ஒருவராகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறார் களோ, யாருக்கு, தன்னுடைய ஜாதி இப்படி கேவலமான திதியி லிருக்கிறதே யென்று இருதயத்திலிருந்து ரத்தம் வடிகிறதோ, யார், விருப்பு வெறுப்பில்லாமல், பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டிய கடமையைச் செய்துகொண்டு போவதிலேயே திருப்தி யடைகிறார்களோ அவர்கள்தான் அந்த ஜாதியைக் கைதூக்கிவிட முடியும். அப்படிக் கை தூக்கி விடுகிற முயற்சியில் அவர்கள் ஈடு பட்டிருக்கிற போது, அவர்களுடைய சுயஜாதியினரே அவர் களை எள்ளி நகையாடலாம்; எண்ணிறந்த இம்சைகளுக்குட்படுத்தலாம். ஆனால் அவர்கள், இவைகளையெல்லாம் லட்சியம் செய்வதில்லை; செய்யவும் மாட்டார்கள். தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்பு வதற்காகச் சதா விழித்துக் கொண்டிருப்பதும், சுமந்து செல்கிறவர்களின் சுமையை இறக்கி வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பதும், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்து கொண்டிருப்பதும் அவர்களுடைய அன்றாட வேலைகளாயிருக் கின்றன. அவர்களைத்தான் மகான்களென்று கொண்டாடுகிறோம்; பெரியார்களென்று போற்றுகிறோம்.
காந்தியும் விவேகானந்தரும் மகான்களல்லரோ? பெரியார்க ளல்லரோ?
இளமையில் இருவரும்
விவேகானந்தர், ஒரு ஞானவீரர்; காந்தி, ஒரு கர்மயோகி. அவர், காட்டுத் தீ; இவர், பொறிகிளம்பாத அனற் பிழம்பு. அவர், கோடைகாலத்து இடி; இவர், கார்காலத்து மழை. அவர், கர்ஜிக்கும் சிங்கம்; இவர், கூவும் குயில். அவர், பேச்சிலே, பார்வையிலே, நடை யிலே எல்லாவற்றிலுமே க்ஷத்திரியர்; இவர், கருத்திலே, பேச்சிலே, செயலிலே எல்லாவற்றிலுமே அந்தணர். அவர், கர்மத்திலே அகர் மத்தைக் கண்டவர்; இவர், அகர்மத்திலே கர்மத்தைக் கண்டவர்;1 அவர், துறப்பதற்காகவே பிறந்தார்; இவர், இல்லறத்திலிருந்து கொண்டே துறவியானார்.
மேலே சொன்ன இந்தத் தன்மைகளெல்லாம், இரண்டு பேருடைய இளம்பிராயத்திலேயே துளிர் விட ஆரம்பித்தன. இதனைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
ஆயிரம் வருஷத்திலே வாழவேண்டிய வாழ்க்கையைச் சுமார் நாற்பது வருஷத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார் விவேகானந்தர் என்று கூறினார் ஓர் அறிஞர். இது மிகவும் உண்மை. விவேகானந்தருடைய வாழ்க்கையைப் பாலியத்திலிருந்து நாம் கவனித்துப் பார்த்தோமானால், ஒரு துடி துடிப்பு, ஒரு வேகம், எதையும் சீக்கிரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஓர் ஆத்திரம் இவைகளை யெல்லாம் காண்கிறோம். இவர், அடிக்கடி தமது சிஷ்யர்களிடம் நான் நாற்பது வரையில் இருக்க மாட்டேன் என்று சொல்வார். அதனாலேயோ என்னவோ, அந்த வயதுக்குள் தாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆவல் இவரிடத்தில் பூரண மாகக் குடிகொண்டிருந்தது. கிழிந்துபோன சட்டையைக் கழற்றி எறிவது போல், இந்த உடலை விட்டெறிந்துவிட்டு நான் போகலாம். ஆனால் வேலை செய்து கொண்டிருப்பதை யென்னவோ நிறுத்த மாட்டேன் என்று ஒரு சமயம் இவர் கூறினார். உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு கூட சேவை செய்து கொண்டிருப்பேன் என்று உறுதியோடு சொன்ன ஒரு மகானைப் பெற்றது நம் தாய் நாடு! சேவையிலே எவ்வளவு ஆர்வம்!
விவேகானந்தர், செல்வமான குடும்பத்திலே பிறந்தார்.1 சீராகவே வளர்க்கப்பட்டார். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே மகாதுடுக்கு. சதா சேஷ்டை. பிடிவாதம் பிடித்து எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொள்வார். தான் நினைத்த காரியம் கைகூடவில்லையென்றால் கூவென்று உரக்கக் கத்துவார். இவரைச் சமாதானப்படுத்துவ தென்பது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய காரியம்.
மூன்றாவது வயது. குழந்தை செய்கிற விஷமமோ சகிக்க முடிய வில்லை. பார்த்தாள் தாயார். மிரட்டினாள்; அடித்தாள்; ஒன்றும் பயனில்லை. கடைசியில் ஒரு நாள், தன்னையும் மிஞ்சிப் போய், குழந்தையைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போய் குழாயின் கீழ் உட்கார வைத்துக் குழாயைத் திறந்து விட்டாள். தண்ணீர் தலையில் வேகமாக விழவே, நரேந்திரன்2 சேஷ்டை அடங்கியது. சரியான பரிகாரம் கண்டுபிடித்து விட்டதாகத் தாயார் திருப்தி கொண்டாள். அது முதற்கொண்டு நரேந்திரன் எப்பொழு தாவது தொந்திரவு செய்ய ஆரம்பித்தால் உடனே குழாயின் கீழே கொண்டு போய் உட்காரவைத்து விடுவாள்.
புவனேசுவரி மாதா, தவங்கிடந்து பெற்றாள் இந்தக் குழந்தையை. ஆனால் ஒரு சமயம், குழந்தையின் உபத்திரவம் பொறுக்க முடியாமல் நான் ஒரு குழந்தையைக் கொடுத்தருளுமாறு சிவபிரானைப் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் அவர் தமது பூத கணங்களில் ஒன்றை என்னிடம் அனுப்பிவிட்டார் என்று கூறினாள். ஒரு தாய் இப்படி வாய்விட்டுச் சொல்லி யிருக்க வேண்டு மானால் அந்தக் குழந்தை எவ்வளவு சேஷ்டை செய்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலா மல்லவா?
தாயார், குழந்தையைச் சாந்தப்படுத்துவதற்கு, குழாயின் கீழ் உட்கார வைப்பதைத் தவிர, வேறோர் உபாயத்தையும் கையாண் டாள். இப்படி எல்லாம் நீ உபத்திரவம் பண்ணுவாயானால், ஒழுங்காக நடந்துகொள்ளா விட்டால், சிவபெருமான் உன்னைக் கைலாசத்திற்கு அழைத்துக்கொள்ள மாட்டார் என்று பயமுறுத்து வாள். உடனே சாதுவாகிவிடும் குழந்தை. ஐயோ! என்ன வாக்கு! தாயே! உனது பயமுறுத்தல் பேச்சிலே ஏன் இப்படி உன்னையறி யாமல் ஒரு மரண அழைப்பைக் கொண்டு புகுத்திவிட்டாய்? இப்பொழுது எங்கள் விவேகானந்தர் இருந்திருந்தால், அவருடைய எண்பதாவது வயதுக் கொண்டாட்டத்தை எவ்வளவு பெருமை யோடு கொண்டாடியிருப்போம்!
மகான்களென்போர், சர்வ ஜீவராசிகளிடத்திலும் தயை பூண்டவர்கள். இந்தத் தயாவிதையானது அவர்களுடைய சிறு பிராயத்திலேயே ஊன்றி விடுகிறது. குழந்தை நரேந்திரனின் பாலிய சினேகிதர்கள் யாரார் தெரியுமா? ஒரு குரங்கு, ஓர் ஆடு, ஒரு மயில், இரண்டு மூன்று வெள்ளைச் சுண்டெலிகள், சில புறாக்கள் முதலியன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டிலே வளர்ந்த பசு. அந்தப் பசுவை நரேந்திரர், தம் சகோதரிகளுடன் சேர்ந்து குளிப்பாட்டுவார்; புஷ்பங்களால் அலங்கரிப்பார். அதற்கும், மற்றப் பிராணி சினேகிதர்களுக்கும் தம் கையாலேயே ஆகாரம் கொடுப்பார். இந்தப் பிராணி தயை விவேகானந்தருக்குக் கடைசி காலம் வரையில் இருந்தது.
நரேந்திரருடைய துறவு மனப்பான்மையைப் பாருங்கள். விசுவநாத தத்தருடைய வீட்டுக்கு அடிக்கடி சாதுக்கள் வருவது வழக்கம். அந்தச் சாதுக்களைப் பார்த்தால் இவருக்குத் தனியான ஓர் ஆனந்தம். அவர்களுக்கு எதையும் கொடுத்துவிடுவார். இதனால் குடும்பத்தினர்பாடு தர்ம சங்கடமாகி விடும். ஒருநாள், பட்டும் சரிகையும் கலந்த ஒரு புதிய துண்டை இவர் இடுப்பிலே கட்டி விட்டார்கள். அதைக் கட்டிக்கொண்ட சிறிது நேரத்திற்குள், தெருவாயிலில் நாராயண ஹரி, நாராயண ஹரி என்ற சப்தம் கேட்டது. நரேந்திரர் உடனே தெருப்பக்கம் ஓடினார். ஒரு சந்நியாசி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தச் சந்நியாசி, எனக்குக் கட்டிக்கொள்ள ஒரு துணி கொடுப்பாயா? என்று கேட்டார். நரேந்திரன் அப்பொழுது ஒரு குழந்தையாக இருக்கவில்லை; கொடையாளியாக விளங்கினார். உடனே தம் இடுப்பிலிருந்த புதுத்துணியை அவிழ்த்து அவர் கையிலே கொடுத்து விட்டார்! ஆச்சரிய மடைந்த அந்தச் சந்நியாசி, அதை, தன் தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு போய்விட்டார்!
நரேந்திரருக்கு, சாதுவென்றும், சந்நியாசியென்றும் சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் அவர்களிடத்திலே ஒரு விசேஷ பக்தி, சிறு வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது. விசுவநாத தத்தர், தம் வீட்டுக்குத் துறவியாக யார் வந்தாலும் அவரே நேரில் உபசரிப்பார். இதனை, குழந்தை நரேந்திரன் கவனித்துக் கொண்டிருப்பார். பொதுவாகவே, கல்கத்தாவில் தத்தர் குடும்பத்து வீடு என்று சொன்னால் அது துறவிகளின் அடைக்கல தானமாக இருந்தது. இந்த வாசனை, பாலிய நரேந்திரன் மீது வீசாம லிருக்குமா?
எல்லாப் பிள்ளைகளையும் போல் நரேந்திரன், பள்ளிக்கூடத் திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கே வகுப்பில் ஒரு கண மாவது அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டுமே, கிடையவே கிடையாது; அப்படியே ஒரு சிறிது நேரமாவது நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமே, அதுவும் இவரால் முடியவில்லை. எப்பொழுதும் ஒருவித அமைதியற்ற தன்மை, ஒரு துடிதுடிப்பு இவரிடம் இருந்தது.
ஆசிரியர்களிடத்தில் பாடஞ் சொல்லி கொள்கிற விஷயத்தில் தானா கட்டும், ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் பத்தைக் கிரகித்துக் கொண்டு விடுவார். உபாத்தியாயர் ஒருமுறை உரக்கப் படித்தால் போதும். அதை உடனே திருப்பி ஒப்புவிப்பார். ஞாபக சக்தி அவ்வளவு அதிகம். ஏழாவது வயதில் ராமாயணம் பாரதம் முதலிய காவியங்களிலிருந்து அநேக சுலோகங்களை எடுத்துச் சொல்லும் சக்தி இவரிடம் இருந்தது. இவை யெல்லாம், இவருடைய பிற்கால வாழ்வின் சூசகங்களாயிருந்தன.
இனி, காந்தியின் பாலிய பருவத்திற்குள் பிரவேசித்துச் சிறிது பார்ப்போம். விவேகானந்தர், செல்வமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்ததைப் போல் இவர் - மோகனதா கரம்சந்த் காந்தி - செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார்.1 இவர் பாட்டனார் சத்திய சீலர். போர்பந்தர் சமதானத்தில் மந்திரியாயிருந்தார். பின்னர், சில பிணக்குகள் காரணமாக அங்கிருந்து விலகி வந்து ஜுனகாட் நவாப்பினிடம் அடைக்கலம் புகுந்தார். நவாப்புக்கு இடது கையால் சலாம் செய்தார். அவமரியாதை செய்ததாக அங்குள்ளவர்கள் முணுமுணுத்தார்கள். அவமரியாதை ஒன்று மில்லை. வலது கையை போர்பந்தர் மன்னருக்கு ஏற்கெனவே கொடுத்து விட்டிருக்கிற படியால் இடது கையால் சலாம் செய்தேன் என்று அந்த உத்தமர் கூறினார். அவர் பெயர் உத்தம சந்த் காந்தி.
அவருடைய மகன்தான் நமது காந்தியின் தகப்பனார். செல்வத்தைக் குவித்து வைக்க வேண்டுமென்ற ஆசை யில்லாதவர். அதைப்போல அதிகமான படிப்பும் இல்லாதவர். ஆனால் அனுபவம் நிறைந்தவர். அப்படியே அற நெறியில் வாழ வேண்டு மென்ற ஆசையுடையவர். மதத்தைப் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி களை அறியமாட்டார். ஆனால் மதப் பற்று நிரம்பியவர்.
இந்த மாதிரியான பரம்பரைச் செல்வத்துடன் பிறந்த மோகனதா காந்தி, சிறுவயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டார். ஆனால் படிப்பிலே அவ்வளவு சூடிகையாக இல்லை. கொஞ்சம் நிதானமென்றே சொல்ல வேண்டும். பெருக்கல் வாய்ப்பாட்டை மனப் பாடஞ் செய்வதே இவருக்குப் பெரிய சிரமமாயிருந்தது. தவிர ஞாபக சக்தியும் குறைவு.
வயதாகி மேல் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த காலத் தில் கூட, படிப்பிலோ, விளையாட்டிலோ எவ்வித சுறு சுறுப்பும் காட்டவில்லை. கூடப் படிக்கிற மாணாக்கர்களோடு கூடிப் பழக மாட்டார். நிரம்ப சங்கோஜம், புதகமுண்டு, தானுண்டு என்ற அளவோடுதான் இருப்பார். சிறு பிராயத்திலிருந்தே பொய் சொல்லி அறிய மாட்டார்.
ஒரு சமயம், பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்டர் வந்திருந்தார். பிள்ளைகளின் அறிவையும், ஆசிரியர்களின் போதனா சக்தியையும் ஒரே சமயத்தில் சோதிக்க வேண்டியது அவருடைய கடமை யல்லவா? எனவே, சில வார்த்தைகளைச் சொல்லி அவற்றைச் சரியானபடி எழுதுமாறு பிள்ளைகளுக்குக் கூறினார். அதில் ஒரு வார்த்தையை மோகனதா தவறாக எழுதினார். இதைப் பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த வகுப்பு ஆசிரியர், அடுத்த பையன் சரியாக எழுதியிருக்கிறான் பார்; அதைப் பார்த்துச் சரியாக எழுது என்று இவரிடம் சைகையினால் கூறினார். அப்படிச் செய்ய இவர் மனம் ஒப்பவில்லை அந்தச் சிறு வயதிலேயே, பிள்ளைகள், காபி அடிக்காமல் பார்த்துக் கொள்வ தற்காக ஆசிரியர் இருக்கிறாரே தவிர, காபி செய்யுமாறு தூண்டு வதற்காக அல்லவே என்று இவருடைய மனச்சாட்சி இவரைக் கேட்டுக் கொண்டே இருந்தது.
மோகனதாஸின் இளமையில் இரண்டு நாடகக் காட்சி களைப் பார்த்தார். இவை, இவருடைய வாழ்க்கை நாடகத்தின் பீடிகை யென்று சொல்லலாம். ஒன்று, சிரவணன் என்ற ஒரு சிறுவனுடைய கதை. இவன், வயதான, கண்ணில்லாத தனது தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிக் கொண்டு காசியாத்திரை போகி றான். வழியில், எதிர்பாராத விதமாக மரணத்தை யடைகிறான். இதைக் கண்டு அந்தப் பெற்றோர்கள் புலம்பிப் புலம்பி புத்திர சோகத்தினால் இறந்து போகிறார்கள். மற்றொன்று, அரிச்சந்திர நாடகம். இவ்விரண்டும் மோகனதாஸின் மனதில் நன்றாக பதிந்து விட்டன. ஒவ்வொருவரும் ஏன் சிரவணனைப் போல் பெரியோர் களிடம் பக்தி செலுத்தக் கூடாது? அரிச்சந்திரனைப் போல் சத்திய சந்தனாக இருக்கக் கூடாது ? என்று அடிக்கடி தம்மையே கேட்டுக் கொள்வார். அரிச்சந்திரனைப் போல், சத்தியத்தைக் காப்பாற்றும் பொருட்டு எல்லாவித கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாரா யிருக்க வேண்டும் என்று அப்பொழுதே இவருடைய களங்கமற்ற பசிய உள்ளம் சங்கற்பித்துக் கொண்டது போலும்!
காந்தி, எப்பொழுதுமே வெறும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வரல்லர்; சீலத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக் கிறவர். என்னுடைய அறிவுக்கு நான் அதிகமாக மதிப்புக் கொடுத்த தில்லை. எனக்கு, பரிசோ, உபகாரச் சம்பளமோ கிடைத்தால் நான் ஆச்சரியமே அடைவேன். ஆனால் என்னுடைய சீலத்தை மட்டும் நான் மிகுந்த ஜாக்கிரதையுடன் காப்பாற்றி வந்தேன். என்னிடத்தில் ஏதேனும் ஒரு சிறிது களங்கம் இருப்பதாகத் தெரிந்தால்கூட நான் அழுது விடுவேன். இது காந்தியின் சுய வாக்கு.
விவேகானந்தரும் காந்தியும், தங்கள் தாய்மார்களைப் பொறுத்த மட்டில் மகா பாக்கியசாலிகள். தன் மகனைச் சான் றோன் எனக் கேட்க இரு தாய்மார்களும் ஆவல் கொண்டார்கள். அதன்படியே தங்கள் புத்திரர் களை வளர்த்து வந்தார்கள். சிவாஜி மகாராஜனுக்கு எப்படி ஜீஜாபாய் தாயாக வாய்த்தாளோ அப்படியே விவேகானந்தருக்கு புவனேசுவரியும், காந்திக்கு புத்ரி பாயும் தாய்மார்களாக வாய்த்தார்கள். தாயின் மடியே இவர் களுக்குப் பாடசாலை. அவர்கள் சொல்லிக் கொடுத்த ராமாயண பாரதக் கதைகளே மந்திரோபதேசம். இவ்விருவரும், தங்கள் பிற்கால வாழ்க்கையில், பெண்மையிலே தெய்வத் தன்மையைக் கண்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுடைய தாய்மார்களின் நல்லுபதேசந்தான். புவனேசுவரி மாதா, தமது மகனுக்கு உபதேசம் செய்வாள்: மகனே! மரணம் வந்தெய்தினாலும் சரி, உண்மையாக நடந்துகொள். ஒழுக்கமுடையவனாயிரு. எப்பொழுதும் பெருந் தன்மையோடு நடந்துகொள். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நட. பிறருடைய உரிமைகளில் தலையிடாதே. எல்லோ ரிடத்திலும் கருணையோடு நடந்து கொள். ஆனால் உறுதி யோடிரு. சந்தர்ப்பம் என்று சொல்லிக் கொண்டு உறுதியினின்று பிறழாதே, அசைந்து; கொடாதே.
பிற்காலத்தில் இருவரும் தியாக மூர்த்திகளாக விளங்கியதற்கு இவர்களுடைய தாய்மார்களின் தூய வாழ்க்கையே காரணம். இருவரும் தம் தம் தாய்மாரிடத்தில் அத்தியந்த விசுவாசம் வைத் திருந்தார்கள். எவனொருவன் பெற்ற தாயை பக்தி சிரத்தையோடு போற்றாமலிருக் கிறானோ அவன் பெரிய மனிதனாகான் என்பது விவேகானந்தரின் வாக்கு.
தங்கள் தாய்மார்களுடைய மனதை எந்த விதத்திலும் புண்படுத்தக் கூடாதென்ற ஒரு நோக்கம் இருவருக்கும் இருந்தது. காந்தி, லண்டனுக்கு பாரிடராகப் பயிற்சி பெறச் செல்வதற்கு முன்னர், புலாலுண்ணேன், மதுபானம் செய்யேன், அந்நிய திரீ களைக் கண்ணெடுத்துப் பாரேன் என்று தாயாரிடம் வாக்குக் கொடுத்து விட்டுச் சென்றார். பாரிடர் பரீட்சையில் தேறி விட்டுத் திரும்பி வந்தார். பம்பாய் துறைமுகம் வந்திறங்கியவுடனே, விரை வில் தாயாரைக் காண வேண்டுமென்ற ஆவல் இவருக்கு அதிகமாக இருந்தது, ஏன் தெரியுமா? கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று தாயாரிடம் பெருமையோடு சொல்வதற்காக. ஆனால் புத்திரிபாய், இவர் வருகைக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அந்தோ! காந்தியின் ஆவல் வெள்ளம், துக்கக் கண்ணீராக வடிந்தது.
புவனேசுவரி மாதாவும் புத்திரிபாயும் தாங்கள் நல்ல பிள்ளை களைப் பெற்றதற்காக மகிழ்ச்சியடையலாம்; பெருமை கொள்ள லாம். மகிழ்ச்சியடையவும் பெருமை கொள்ளவும் அவர்களுக்குப் பூரண உரிமை யுண்டு; தகுதியுண்டு. ஆனால் அவர்கள், உண்மை யில், பாரத மாதாவின் தவத்தினையே இரண்டு திருவுருவங்களாகப் பெற்றெடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அவ்விரு அன்னைமாரும் வாழ்க!
விவேகானந்தர், இளமையிலிருந்தே உடல் உறுதியுடைய வராக இருந்தார். உடற் பயிற்சிப் போட்டிகளில் அநேக பரிசுகளும் பெற்றிருக் கிறார். தமது வீட்டிலேயே உடற் பயிற்சிசாலை யொன்றை அமைத்து, அதில் தமது தோழர்கள் எல்லோருக்கும் அநேக விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார். சிலம்பம் பயிலுதல், படகோட்டுதல், மல் யுத்தம் செய்தல் முதலிய எல்லா வித்தைகளும் இவருக்கு நன்றாகத் தெரிந்தி ருந்தன.
காந்தி, இளமையில் இதற்கு நேர் மாறாகவே நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்தில் படித்த போது, உடற் பயிற்சி வகுப்புக்குப் போவது இவருக்கு வேம்பாகவே இருந்தது. ஒரு சமயம் இந்த வகுப்புக்குப் போகாமலிருந்ததற்காக ஓர் அணாவோ இரண்டணாவோ அபராதம் கூடச் செலுத்தியிருக்கிறார்!
இங்ஙனம் இருவரும் இளமையில் உடலோம்புகின்ற முறையில் மாறுபட்டவர்களாக நடந்து வந்தபோதிலும், பிற்காலத்தில், இருவரும், எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளக் கூடிய உடல் உரம் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஓயாமல் உழைப்பதற்கும், அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்வதற்கும் இருவருடைய தேகமும் இடங் கொடுத்தன. காந்தி, லண்டனுக்கு வட்டமேஜை மகா நாட்டை முன்னிட்டுச் சென்ற போது, குளிரிலும் பனியிலும்கூட, தமது இயற்கையான உடை யுடன்தான் இருந்தாரே தவிர, வேறு அதிகமான உடைகளை உபயோகிக்க வில்லை. இதற்கு இவருடைய மனோசக்தி காரணமென்று சிலர் கூறலாம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் எவனொருவன் புலனடக்கம் பெற்றிருக்கிறானோ, தனது அன்றாட வேலைகளைச் செய்வதில் ஒருவித ஒழுங்கை அனுசரிக்கிறானோ, உணவு, உடை, தூக்கம் முதலிய விஷயங்களில் மிதமாயிருக்கிறானோ அவனை நோய்கள் சுலபமாக அண்டுவதில்லை. அப்படி அண்டினாலும் அவைகளினால் அவன் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. அவன், உழைப்பிலே சோர்வு காணமாட்டான். அவன் அறிவிலே ஒரு தெளிவு இருக்கும். விவேகானந்தரும், காந்தியும் தங்களுடைய வாழ்க்கையில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து வந்தார்களாதலி னாலேயே அவர்களால் அதிகமான வேலையைச் செய்ய அவர் களுடைய உடல் இடங்கொடுத்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், இருவரும், தங்கள் உடலைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருந் தார்களே தவிர, உடலுக்குத் தாங்கள் அடிமையாயிருக்கவில்லை.
விவேகானந்தர், பரம்பரையான வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் வக்கீல் தொழிலை இவர் அறவே வெறுத்து வந்தார். தம் நண்பரொருவருக்குப் பின்வருமாறு புத்திமதி கூறுகிறார்: எனது தகப்பனார் ஒரு வக்கீல்தான். ஆனால் என் அன்புக்குரியவர் யாரும் வக்கீலாவதை நான் விரும்பவில்லை. எனது குருநாதர் வக்கீல் தொழிலுக்கு விரோத மாயிருந்தார். எந்தக் குடும்பத்தில் அதிகமான வக்கீல்கள் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் நிச்சயம் துக்கத்தை யடையும் என்பது என் நம்பிக்கை. நமது தேசத்தில் இப்பொழுது வக்கீல்கள் நிரம்பியிருக்கிறார்கள்.
காந்தி, மந்திரி பரம்பரையிலே பிறந்தவர். இவர் பாட்டனாரும் தகப்பனாரும் ராஜபக்தர்களாக இருந்து காலங் கழித்து விட்டார்கள். ஆனால் இவர், தம்மை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதிலே திருப்தியடைகிறார். இவருடைய முன்னோர்கள் அரசர்களுக்கு மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ, தொட்டிலிலே உதைத்து விளையாடும் குழந்தை முதல், முக்காலால் நடந்து செல்லும் முதியோர் வரை எல்லோருக்கும், அவரவர்களுடைய நிலைமையிலிருந்து, வரும் பொருளுரைக்கும் மந்திரியாயிருக்கிறார். எல்லோரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இவரிடம் யோசனை கேட்கிறார்கள். உலகத்து ராஜ தந்திரிகள், அரசாங்கத்து மந்திரிகள் ஆகிய எல்லோரும், காந்தி என்ன சொல்கிறாரென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவருடைய முன்னோர்கள், ஒரு சிறிய பிரதேசத்திற்கு மட்டும் மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ உலகத்துக்கெல்லாம் மந்திரியாயிருக்கிறார்.
விவேகானந்தர் ஆளப்பிறந்தார். காந்தி தொண்டு செய்யப் பிறந்தார். இருவருடைய பாலிய வாழ்க்கையிலும் இந்த அறிகுறிகள் காணப்பட்டன. விவேகானந்தருடைய முக்கியமான சிறு பிள்ளை விளையாட்டுகளிலே ஒன்று என்னவென்றால், தமது வீட்டு முற்றத்தில், தம்மோடு விளையாட வரும் எல்லாப் பிள்ளைகளை யும் ஒன்று கூட்டி வைத்துக் கொள்வார். ஒரு தர்பார் நடக்கும். அதில் விவேகானந்தர் அரசன்; ஓர் உயர்ந்த தானத்தில் கொலு வீற்றிருப்பார். அவருக்கு எதிரே இரு பக்கங்களிலும் ஆதானிகர்கள் இருப்பார்கள். பிரஜைகள் வேறே. யாராவது ஒரு பையன் குற்றவாளியாக விசாரணைக்கு கொண்டு வரப்படுவான். அவனை அரசன் விசாரிப்பார்; தண்டிப்பார். இந்த மாதிரியான விளை யாட்டுகளிலேதான் விவேகானந்தருக்கு அதிகமான விருப்பம். பள்ளிக்கூட மைதானத்திலே யாகட்டும், வேறு எங்கேயாகட்டும், விவேகானந்தர்தான், மற்றப் பிள்ளைகளுக்குத் தலைமை வகித்து அவர்களை நடத்திச் செல்வாரே தவிர, மற்றவர்களைப் பின்பற்றி இவர் செல்லமாட்டார். வீட்டிலே கூட, பெற்றோர்களும் மற்ற உறவினர்களும், இவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டே நடப்பார்கள். இவர் பேசுவதும் அதிகார தோரணையிலேயே இருக்கும்.
காந்தியோ, சிறு பிராயத்திலிருந்தே, மற்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்யலாம், பெரியோர் மனம் புண்ணாகாமல் எப்படி எப்படி நடந்து கொள்ளலாம் என்ற கருத்துடையவராக இருந்திருக்கிறார். பள்ளிக் கூடத்தில் படிக்கிற போது, உடற்பயிற்சி வகுப்புக்குக்கூட இவர் செல்ல விரும்பவில்லை. அங்குச் சென்று கழிக்கிற நேரத்தை, தகப்பனாருக்குப் பணிவிடை செய்வதில் கழிக்கலாமே யென்று கருதுவார். அப்படியே பணிவிடையும் செய்வார். உடற் பயிற்சி விஷயத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்புக்குக் காரணம், எனது தகப்பனாருக்குத் தாதி போல் இருந்து சிசுருஷை செய்ய வேண்டுமென்ற அதிகமான ஆவல்தான். பள்ளிக்கூடம் விட்டவுடனே, வேகமாக நேரே வீட்டுக்கு வந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்குவேன் என்று இவர் தமது சுய சரித்திரத்தில் கூறுகிறார்.
இருவரும் மகான்கள்
தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி நிற்கின்ற காலத்தில், அந்த அதர்மத்தை வீழ்த்தி தருமத்தை தாபிக்கும் பொருட்டு கடவுள் அவதரிக்கிறார் என்று கீதையைக் குறிப்பிட்டுக் காட்டிப் பெரி யோர்கள் நமக்கு உபதேசிக் கிறார்கள். இதன் தாத்பரியம் என்ன? தர்மம் குன்றி விட்டது, அதர்மம் ஓங்கிவிட்டது என்று சொன்னால் அதற்கு அளவுகோல் என்ன? இதனைப் பற்றி நம்மில் அநேகர் சிந்திப்பதே இல்லை. இந்தப் பிரச்னை, நமது அன்றாட வாழ்க்கை யோடு ஒட்டியதன்று, நமது வாழ்க்கைக்குப் புறம் பானது என்று கருதி, இதனை நாம் புறக்கணித்து விடுகிறோம். இப்படிப் புறக் கணித்து வந்ததன் பயன்தான் இப்பொழுது நாமிருக்கும் நிலை: அதுதான் அடிமை வாழ்வு.
மனிதன் பிறக்கிறபோது சுதந்திரமாகவே பிறக்கிறான் என்று பிரெஞ்சு அறிஞனாகிய ரூஸோ என்பவன் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர்தான் சொன்னான். இது, நமது முன் னோர்கள் கண்ட உண்மையின் ஒரு மெல்லிய எதிரொலிதான். மனிதனுடைய ஆத்மா பந்தமற்றது, அப்படி இருப்பதுதான் அத னுடைய இயற்கை நிலையென்று பாரத நாட்டு முனிவர்கள் நமக்கு எத்தனையோ வகைகளில் வலியுறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். மனிதன், தனது அறியாமை காரணமாக, இந்த இயற்கை நிலையிலிருந்து இறங்கி விடுவானாகில் அவனை அநேக பந்தங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இயற்கைக்கு எஜமானனா யிருப்பது போய், அவன் அதற்கு அடிமையாகி விடுகிறான். இந்த அடிமை நிலையிலே அவனை அநேக துன்பங்கள், துயரங்கள், பிணிகள் முதலிய எல்லாம் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இவைகளி னின்று அவனை விடுதலை செய்ய யாரோ ஒரு மகான் தோன்று கிறான். அந்த மகானிடத்தில் அசாதாரணமான திறமையும் சக்தியும் இருக்கின்றன. அவன் எந்தவித பந்தங்களினாலும் பிணிக்கப்படாமலிருக் கிறான். அப்படி பிணிக்கப்படாமலிருப்பதனால் தான், அவனால் மற்றவர்களைக் கைதூக்கி விட முடிகிறது. தங்களைவிட வலிய னாகவும் முன் யோசனையுடைய வனாகவும் அந்த மகான் இருப் பதைப் பார்க்கிற ஜனங்கள், அவனிடத்தில் ஒரு தெய்வத்தன்மை குடி கொண்டிருக்கிறதென்று நம்பி, அவனை ஒரு தெய்வாமிசம் என்றும், கடவுளின் அவதாரமென்றும் கொண்டாடு கிறார்கள். ஏனென்றால், எந்தச் சக்திகள், கடவுளிடத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார் களோ அந்தச் சக்திகளில் ஒரு சிலவேனும் தங்களிடத்தில் இல்லாம லிருப்பதையும், அந்தச் சில சக்திகள் மேற்படி மகானிடத்தில் இருப் பதையும் அவர்கள் பிரத்தியட்ச மாகப் பார்க்கிறார்கள். இதனா லேயே அவனை அவதார புருஷ னென்று கொண்டாடுகிறார்கள்.
கடவுளிடத்திலே சில சக்திகள் இருப்பதாக மனிதன் நினைக் கிறானே, அந்தச் சக்திகள் யாவும் அவனிடத்திலும், பிரதியொரு மனிதனிடத்திலும் இருக்கின்றன. இதை அவன் உணர்வதுதான் இல்லை. தான், பரம்பொருளென்னும் செந்தழலிலிருந்து கிளம்பின ஒரு பொறி என்பதை அறவே மறந்து விடுகிறான். இதற்குக் காரணம், அவன் தனது இயற்கை நிலையை, உணராததுதான்; அந்த நிலையி லிருந்து இழிந்துபட்டதுதான். இயற்கை நிலையை அதாவது பந்தமற்ற வாழ்வை, உணர்கிறவன்யாரோ, உணர்த்தவல்லவன் யாரோ, அவன்தான் மகான்; கடவுளின் அவதார புருஷன். மனித னுடைய அறிவும் இதயமும், பொருளாதார ஆதிக்கத்திற்கோ, அரசியல் ஆதிக்கத்திற்கோ, சமுதாய ஆதிக்கத்திற்கோ, மத ஆதிக்கத் திற்கோ ஏதோ ஒருவித ஆதிக்கத் திற்குட்பட்டு அடிமையாகிவிடுமே யானால் அதுதான் இருள் படர்ந்த யுகம். அதாவது எங்கே அடிமைத்தனம் நிலவியிருக்கிறதோ அங்கே அறியாமை குடி கொண்டு விடுகிறது. இந்த அஞ்ஞான இருளைப் போக்கவரும் ஞான சூரியனே மகான்.
அடிமைத்தனமும் அறியாமையும் கலந்திருக்கிற கலப்புக்குத் தான் அதர்மம் என்று பெயர். அப்படியானால் தர்மம் என்பது என்ன? இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசிய மல்லவா? தர்மம் என்பதற்கு அறிஞர் ராதாகிருஷ்ணன் பின்வருமாறு ஓர் அழகான வியாக்கியானம் செய்கிறார்: தனிப்பட்ட ஒரு வியக்தியாகவும், சமுதாய அங்கத்தினனாகவும் பிரதியொரு மனிதனையும் பண்படுத்திக் கொடுக்கிற லட்சியங்கள், சக்திகள், நோக்கங்கள், தாபனங்கள் முதலிய யாவற்றிற்கும் பிரதிநிதியாக இருப்பது எதுவோ, அது தான் தர்மம். இதனுடைய சாரம் என்னவென்றால், மனிதனுடைய அற வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்திக் கொடுப்பது எதுவோ அதுதான் தர்மம். இந்த இரண்டுக்கும், அதாவது அற வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும், என்று முரண்பாடு ஏற்படுகிறதோ அன்றே, தர்மம் குலைந்து அதர்மம் மேலோங்கி விட்டதென்பது அர்த்தம். முரண் பட்ட இந்த நிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவே அவ்வப்பொழுது மகான்கள் தோன்றுகிறார்கள்.
காந்தியும் விவேகானந்தரும் இந்த மகான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்த மகான்களின் பரம்பரையானது இந்திய நாகரிகத்தின் அடிப்படையான அமிசத்தை மட்டும் எப்பொழுதும் விடாமல் காப்பாற்றி வந்திருக்கிறது. அந்த அடிப்படைதான் என்ன?
இந்தியாவில் எப்பொழுதும் வாழ்க்கையை லௌகிக வாழ்க்கை யென்றும் பாரமார்த்திக வாழ்க்கையென்றும் இரண்டு கூறாக்கி யாரும் பேசியதே கிடையாது. வாழ்க்கையை ஒரு தொகுப்பாகவே நமது முன்னோர்கள் பார்த்தார்கள். வாழ்க்கை, பூரணத்துவம் அடையவேண்டு மானால் லௌகிகமும் தேவை, பாரமார்த்திகமும் தேவையென்றுதான் சொன்னார்களே தவிர இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையவை என்று அவர்கள் சொல்லவில்லை. வாழ்க்கையை மதத்தோடு பிணைத்தே அவர்கள் பேசியிருக்கிறார்கள். அறிஞர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: இந்தியாவின் பாரமார்த்திக ஞானம், எங்கோ தனியாகவுள்ள குகைகளில் வாசஞ்செய்யவில்லை; மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. கீதையும் உப நிஷதங்களும், பொது ஜனங் களுடைய நம்பிக்கையோடு ஒட்டினாற் போலவே இருக்கின்றன. அவை, தேசத்தின் சிறந்த இலக்கியங்களாக இருப்பதோடு, ஜனங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் கருவி களாகவும் இருக்கின்றன. உயர்ந்த உண்மைகள் சாதாரண ஜனங் களுக்குச் சுலபமாக விளங்கவேண்டு மென்பதற்காக அவைகளைப் புராண இதிகாசக் கதைகளினால் அலங்கரித்து அந்த உயர்ந்த உண்மைகளைப் புகட்டியிருக்கிற விஷயத்தில் இந்தியர்களே பெரிய வெற்றி யடைந்திருக்கிறார்கள்.
பிரதியொரு மனிதனும் இரண்டு கடமைகளுடையவனாய் இருக்கிறான். ஒன்று தனக்கு அல்லது தனது குடும்பத்திற்கு; மற்றொன்று தனது சமுதாயத்திற்கு. ஒன்றைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றை அவன் செய்ய முடியாது; செய்யவும் கூடாது. முன்னதை அற வாழ்க்கை யென்றும் பின்னதை அரசியல் வாழ்க்கை யென்றும் சொல்கிறோம். இந்த இரண்டு விதமான வாழ்க்கை களையும் அவன் ஒன்றுபடுத்தி நடத்திச் சென்றால்தான் அவன் பிரயோஜனமான வாழ்க்கையை நடத்தியவனா கிறான். குழந்தைக்குத் தகப்பனாகவும், குடும்பத்திற்கு எஜமானனாகவும், சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாகவும் பிரதியொரு மனிதனும் இருக்க வேண்டு மென்பதே நமது முன்னோர்களின் உபதேச சாரம். இதனையே காந்தியும் விவேகானந்தரும் புதிய பாஷைகளில் வலியுறுத்தியிருக் கிறார்கள்.
காந்தி, அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஆன்ம உபதேசம் செய்கிறார். விவேகானந்தர், ஆன்மா என்று சொல்லிக்கொண்டு அரசியலைப் போதித்தார். ஆனால் இருவருடைய நோக்கமும், இந்தியாவானது ஆன்மார்த்த விஷயத்திலும் அரசியல் விஷயத்தி லும் பூரண சுதந்திரம் பெற்றிருக்கவேண்டுமென்பதுதான். காந்தி, பலமுறை, தாம் அவசியத்தை முன்னிட்டே அரசியலில் பிரவேசிக்க வேண்டியிருந்ததென்றும், ஆனால் உண்மையில் அது மெய்ப் பொருளைக்காணும் முயற்சிகளிலே ஒன்றென்றும் கூறியிருக்கிறார். அறிஞர் ராதாகிருஷ்ணன், இந்தியா ஏன் தற்போது அரசியலில் தீவிர மாக ஈடுபட்டிருக்கிறதென்பதன் காரணத்தைப் பின்வரும் இரண்டு வாக்கியங்களினால் அழகுபடத் தெரிவித்திருக்கிறார்: ஆத்மாவைக் காத்துக் கொள்ளவேண்டு மென்ற ஆவலின் பகிரங்க ஓசை தான், சுயராஜ்யம் என்ற முழக்கம். எனவே, அரசியல் அடிமைத்தனத்தி னால் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமென்பதற் காகவே காந்தி, அந்த அடிமைத்தனத்திலிருந்து மீளும் முயற்சியிலே ஈடுபட்டுடிருக் கிறார்.
விவேகானந்தர் ஓர் அரசியல்வாதியல்ல. தாம் அரசியல் வாதியென்று சொல்லப்பட்டதையும் அவர் கண்டித்து வந்தார். ஆனால் அரசியல் பிரயோஜனம் எதுவோ அதற்காகவே அவர் பாடுபட்டு வந்தார்.
அரசியலின் பிரயோஜனம் என்ன? எல்லா ஜனங்களும் இன்ப வாழ்வு நடத்த வேண்டுமென்பது, பிரதியொரு மனிதனும், தனது அறிவுக்கும் திறமைக்கும் இயன்றவாறு வளர்ச்சி பெறுவதற்கு என்னென்ன சாதனங்கள் வேண்டுமோ அந்தச் சாதனங்களை யெல்லாம் தேடிக் கொடுப்பதுதான் அரசியலின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுகிற அளவுக்குத்தான் பிரதியொரு மனித னுடைய ஆன்ம வளர்ச்சியும் இருக்கிறது. பட்டினி கிடக்கும் வயிற்றில் ஞானத்தை, அஃது எவ்வளவு உயர்ந்த பண்டமாயிருந் தாலும், கொண்டு திணிக்க முடியுமா? காலியா யுள்ள வயிற்றுக்கு மதம் இல்லை என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். இதனாலேயே விவேகானந்தர், பாமர ஜனங்களின் வாழ்க்கையில் படர்ந்து கிடக்கும் வறுமைப் பிணியையும் அறியாமை இருளையும் போக்க வேண்டுமென்று பல இடங்களிலும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.
பாமர மக்களென்று அழைக்கப்படுகிற சாதாரண ஜனங் களை நாம் புறக்ணித்து விட்டோம். இது நமது தேசமே சேர்ந்து செய்த பெரும் பாவம். நாம் இப்பொழுது வீழ்ந்துபட்டிருப்பதற்கு இதுதான் காரணம். நமது சகோதரர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல உடை வழங்கி, நன்றாகக் கவனிக்கப் படாதவரையில், நாம் அரசியலைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அதனால் எவ்வித பயனும் ஏற்படாது. நாம் பெறும் கல்விக்கு அவர்கள் பணம் கொடுக்கிறார்கள்; நமது கோயில்களை அவர்கள் கட்டுகிறார்கள்; இவைகளுக்குப் பிரதியாக நம்மிடமிருந்து உதை பெறுகிறார்கள். அனுபவ ரீதியாகப் பார்க்கப் போனால் அவர்கள் நம்முடைய அடிமைகளாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கமானால், முதலில் நமது பாமர சகோதரர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். இது விவேகானந்தர் வாக்கு.
அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் தேவை யில்லை யென்கிறார் காந்தி. அரசியல் இல்லாவிட்டால் அற வாழ்வு சோபிக்காது என்கிறார் விவேகானந்தர். இரண்டும் ஒன்றுதான். இரண்டு பேருடைய உபதேசங்களிலும், அறத்தையும் அரசியலை யும், கடவுளையும் மனிதனையும், தூல உடலையும் சூட்சும ஆன்மாவையும் ஒன்று படுத்திக் காட்டி யிருப்பதையே நாம் நன்றாகப் பார்க்கிறோம். இந்தியாவில் நெடுங்காலமாக உபதேசிக்கப் பட்டுவந்ததை அனுசரித்தே இவர்கள் இம்மாதிரி உபதேசிக்கி றார்கள்.
காந்தியும் விவேகானந்தரும் ஹிந்து மதத்தின் உண்மையான பிரதி நிதிகள். அப்படித் தங்களை அழைத்துக் கொள்வதில் இவர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஹிந்து மதத்தின்மேலே படிந்து மூடிக்கொண்டிருக்கும் காலங் கடந்த தூசுகள், குப்பைகள் முதலியவைகளை இவர்கள் நிர்த் தாட்சண்யமாக அப்புறப்படுத்தி யிருக்கிறார்கள். இதனால், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அநேகருடைய கோபதாபங்களுக்கும் ஆளாகியிருக் கிறார்கள்.
இன்றைய ஹிந்து ஜாதி எப்படியிருக்கிறது? இதை அரவிந்தர் வாக்கால் எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்: உபநிஷத காலத் திலோ அல்லது பௌத்த காலத்திலோ அல்லது இதிகாச காலத்திலோ பிறந்து வாழ்ந்த ஓர் இந்தியன், தற்கால இந்தியாவிற்கு வந்து பார்ப்பானாயின், அவன் தன்னுடைய ஜாதி, புராதனத்தின் உருவத்தையும் மேல் மூடியையும், நைந்துபோன கந்தல்களையும் விடாமல் பற்றிக்கொண்டிருப்பதையும், அந்தப் புராதன உபதேசங் களின் உயர்ந்த கருத்துக்களில் பத்துக்கு ஒன்பது மடங்கை இழந்து விட்டிருப்பதையும் பார்த்துத் திகைத்துப்போவான். இன்னும், மனோபலமின்மை, தேக்கம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், விஞ்ஞானத்தின் ஒடுக்கம், கலை ஊற்று வற்றிபோயிருத்தல், சிருஷ்டி சத்தியின் குறைவு முதலியவைகளையும் கண்டு ஆச்சரியமடை வான்.
இன்றைய ஹிந்து, ஒரு கோழையாயிருக்கிறான். வேதமென்றும் புராணமென்றும் அவன் வாய் நிறையச் சொல்லிக் கொள்கிறான். உபநிஷதத்தையும் பகவத் கீதையையும் பாராயண புத்தகங்களாகப் பூஜையிலே வைத்திருக்கிறான். கடவுளை நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்கிறான். ஒரு காலத்தில் ஞான கோபுரத்தின் மீது ஏறி நின்ற அவன் இப்பொழுது அறியாமைக் குழியிலே விழுந்து உழன்று கொண்டிருக்கின்றான். அவன் உருவத்தைப் போற்றிக் கொண்டே உயிரை இழந்து விட்டான்.
ஒரு காலத்தில் அவன், தான் ஹிந்து என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொண்டான். அந்தப் பெருமையோடு தன் கடமையையும் நன்கு உணர்ந்துகொண்டிருந்தான். இதற்குக் கீதையிலிருந்தே ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்ட விரும்பு கிறோம். போர்க்களத்தில் கௌரவ சேனையைப் பார்த்து விட்டு அர்ஜுனன் சோர்வடைகிறான். அவனுடைய வாய் உலர்ந்து போகிறது. உடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. அவனுடைய காண்டீவம் கூட கையிலிருந்து நழுவுகிறது. இவைகளை யெல்லாம் பார்த்தான், பார்த்தனுக்கு ரதம் ஓட்டி வந்த கண்ணன், என்ன சொல்லுகிறான்? இஃது ஆரியருக்குத் தகாது என்கிறான். இதைச் சொல்லிவிட்டுப் பிறகுதான், பேடித்தன்மை யடையாதே என்பன போன்ற உபதேசங்களைச் செய்கிறான். ஆரியருக்குத் தகாது என்கிற ஒரு வாக்கியத்திலே நமது ஜாதீய தர்மத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறான் கண்ணன்?
இதையே காந்தியும் விவேகானந்தரும் பல வழிகளில் எடுத்துச் சொல்லுகிறார்கள். காந்தி, யங் இந்தியா பத்திரிகையில் எழுது கிறார்: ஹிந்துக்களாகிய நாம் பயத்தையும் கோழைத்தனத்தையும் விட்டுவிட வேண்டும். பிறரை நம்பக்கூடிய தைரியம் நமக்கு வேண்டும். எல்லாம் சரிப்பட்டுவிடும். அச்சமும் அறியாமையுந்தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தளைகள். இவற்றை அறுத்தெறிய வேண்டும். ஹிந்து என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொருவனும் பெருமை கொள்ள வேண்டும். விவேகானந்தர் முழங்குகிறார் கேளுங்கள்:
ஹிந்து என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், உங்க ளுடைய தேகத்தில் ஒரு சக்தி உண்டாக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் ஹிந்துக்கள். ஹிந்து என்று சொல்லிக்கொண்டு எந்த நாட்டிலிருந்து எவன் வந்தாலும் சரி, அவன் எந்த பாஷையைப் பேசினாலும் சரி, அவனை நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவின னாகக் கருத வேண்டும். ஒரு ஹிந்து, துன்பத்திலே உழன்றுகொண் டிருந்தால், உங்கள் வயிற்றிலே பிறந்த பிள்ளையே அம்மாதிரி அவதைப்படுகிறான் என்று நீங்கள் கருத வேண்டும். உங்களுடைய சகோதர ஹிந்துக்களின் நலனுக்காக நீங்கள் எல்லாத் துன்பங்களை யும் குருகோவிந்த சிம்மனைப்போல் சகித்துக்கொள்ள வேண்டும். அவன் - அந்த குருகோவிந்தன் - கொடியர்களிடமிருந்து தனது நாட்டைக் காப்பாற்றினான். ஆனால் அந்த நாட்டிலிருந்தே விரட்டப்பட்டு விட்டான். ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காகத் தனது ரத்தத்தைச் சிந்தினான். யுத்த களத்தில் தனது பிள்ளைகள் கொல்லப்படுவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான். யார்பொருட்டுத் தன் ரத்தத்தையும், தனது நெருங்கியவர்களுடைய ரத்தத்தையும், பிரியமானவர்களுடைய ரத்தத்தையும் சிந்தினானோ அவர்களாலேயே கைவிடப்பட்டுவிட்டான். கடைசியில் அவன் காயமடைந்த சிம்மம்போல் தனது நாட்டிலிருந்து அமைதியாக வெளியேறி தெற்கு நோக்கிச் சென்றான். ஆனால் அவன் வாயி லிருந்து, யார் அவனைக் கைவிட்டு விட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை! உங்கள் நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்யவேண்டுமானால் நீங்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு குருகோவிந்த சிம்மனாயிருக்கவேண்டும். உங்கள் நாட்டு மக்களிடத்தில் நீங்கள் ஆயிரக்கணக்கான குறை களைக் காணலாம். ஆனால் அவர்களுடைய தேகத்தில் ஹிந்து ரத்தம் ஓடுகிறதென்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கிழைத் தாலும் சரி, அவர்களைத்தான் உங்களுடைய முதற் கடவுளர்களாக நீங்கள் வணங்கவேண்டும். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒவ்வொரு சாபமிட்டா லும் சரி, நீங்கள் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையே சொல்லவேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்திவிடுவார்க ளானால், அந்த கோவிந்த சிம்மத்தைபோல் மௌனமாக மரித்துப் போக எங்கேயாவது செல்லுங்கள். அப்பொழுதுதான் ஹிந்து என்னும் பெயருக்கு நீங்கள் தகுதியுடையவர்கள். அப்படிப்பட்ட லட்சியம்தான், நமக்கு முன்னே எப்பொழுதும் இருந்து கொண் டிருக்கவேண்டும். நம்முடைய பிணக்குகளையெல்லாம் புதைத்து விடுவோமாக! நம்மைச் சுற்றி எங்கணும் இந்த அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சுவோமாக!
இங்ஙனம் இருவரும் ஹிந்துக்களுக்கு அன்பையும் அஞ்சாமையையும் குழைத்து ஊட்டியிருக்கிறார்கள். இன்று இந்தியாவில் சிறிது நிமிர்ந்து நடக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகி யிருக்கிறதென்றால் அதற்கு இவ்விருவருமே காரணம். விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை நிலத்தில்தான், காந்தி, அஹிம்ஸை விதையை ஊன்றினார்.
தாங்கள் சநாதன ஹிந்துக்களென்று சொல்லிக் கொள்வதில் காந்தியும் விவேகானந்தரும் பெருமை கொள்கிறார்களென்றாலும், இருவரும் சமரஸ ஞானிகள். இதில்தான் இவர்களுடைய பெருமை இருக்கிறது. என்னுடைய தாயை எப்படி நான் நேசிக்கிறேனோ அப்படியே என்னுடைய மதத்தை நான் நேசிக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் மற்றத் தாய்மார்களிடத்தில் நான் எப்படி பக்தி சிரத்தையோடு நடந்து கொள்கிறேனோ அப்படியே மற்ற எல்லா மதங்களின் விஷயத்திலும் நடந்து கொள்கிறேன். இந்தமாதிரியான கருத்துடையவரே காந்தி. எனது மதத்திற்குப் பூகோள எல்லையே கிடையாது. என்று ஓரிடத்தில் கூறுகிறார். உலகத்திலே ஒரு மதம் உண்மையானதாயிருந்தால் எல்லா மதங்களும் உண்மையானவை யாயிருக்கவேண்டும். அடிப்படையான அமிசங்களில் எல்லா மதங்களும் ஒன்றுதான். எனக்கு ஐந்து விரல்கள் இருப்பது உண்மை யானால், மற்றவர்களுக்கும் ஐந்து விரல்கள் இருப்பது உண்மை தானே? என்று விவேகானந்தர் கேட்கிறார். இருவரும், புத்தருடைய கருணையையும், யேசுநாதரின் தியாகத்தையும், நபிகள் நாயகத்தின் சகோதர நேயத்தையும் அப்படியே தங்கள் வாழ்க்கை யில் அனுஷ் டித்துக் காட்டியிருக்கிறார்கள்.
காந்தியும் விவேகானந்தரும் தீண்டாமைக்குப் பரம விரோதிகள். ஹிந்து மதத்திற்கு இஃதொரு பெரிய களங்கம் என்று கருது கிறார்கள். ஹிந்து சாதிரங்களிலே தீண்டாமைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அப்படி ஆதாரம் இருப்பதாகக் காட்டி, தீண்டாமையை ஹிந்து மதம் அங்கீகரிக்கிறதென்று யாராவது சொன்னால், நான் ஹிந்து மதத்தைத் துறந்துவிடச் சிறிதும் தயங்க மாட்டேன் என்று கூறுகிறார் காந்தி. எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஒரேவிதமான கடவுட் தன்மையைக் காணும் மகா புருஷர்கள், மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கொஞ்சங் கூட சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அந்த ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்திக்கொண்டுபோக அவர்கள், மகத்தான தியாகங்களை யும் செய்வார்கள். தீண்டாதவன் என்று கருதப்படுகிற ஒருவன் இருக்கிற வரையில் நானும் ஒரு தீண்டாதவனே என்று காந்தி மனம்பொங்கிக் கூறுகிறபோது, அவருடைய தியாகத்தின் எல்லையை நாம் ஒருவாறு எட்டிப்பார்க்கிறோம்.
விவேகானந்தரும் இங்ஙனமே தீண்டாமையை பலபடக் கண்டித்திருக்கிறார். தீண்டாமை என்பது ஹிந்து மதமல்ல. நமது கிரந்தங்களில் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தத் தீண்டாமைக் கறையானது, நம்முடைய தேசீய சக்தியைக் குன்றச் செய்திருக்கிறது என்று ஆத்திரப்படுகிறார். தேசீய திருஷ்டியில் தான் இவர் இந்தத் தீண்டாமைப் பிரச்னையை நோக்குகிறார். ஏனென்றால் நமது தேசம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பது இவர் நோக்கம். வாழ்வு எங்கேயிருக்கிறது? அன்பிலே இருக்கிறது. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறவன்தான் உண்மையான வாழ்க்கையை நடத்தியவனா கிறான். அப்படியிருக்க, நம்மிலே ஒரு சிலரைமட்டும் ஒதுக்கிவைத்து விட்டு, அதாவது கடவுளின் குழந்தை களான ஒரு சிலரை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் மட்டும் அவருடைய குழந்தைகளென்று சொல்லிக்கொண்டு அந்தக் கடவுளிடம் போக முயலலாமா? அப்படிப் போனால்தான், கடவுளின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்குமா? தம் சிஷ்யரொரு வருக்கு விவேகானந்தர் எழுதுகிறார்:
எல்லா ஜீவ சிருஷ்டிகளையும் உன்னைப் போலவே பார் என்ற உபதேசம் நூலோடுதான் நிற்க வேண்டுமா? பசியோடு புலம்பும் வாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கொடாதவர்கள், மற்றவர்களுக்கு எப்படி விமோசனம் அளிக்கப் போகிறார்கள்? மற்றவர்களுடைய மூச்சுப்பட்ட மாத்திரத்தில் அசுத்தர்களாகிவிட்டதாகக் கருதுபவர்கள், மற்றவர்களை எப்படி பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள்? தீண்டாமை யென்பது ஒரு மனோ வியாதி. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிற வாழ்க்கைதான் விரிந்த வாழ்க்கை. சுய நலம் என்பது சுருங்கிய வாழ்க்கை. ஆகையால் எல்லோரிடத்திலும் அன்பு செலுத் துவதுதான் வாழ்க்கையின் ஒரே விதமான சட்டம். எவனொருவன் அன்பு செலுத்துகிறானோ அவன் வாழ்கிறான். அப்படியே எவனொருவன் தன்னலத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருக் கிறானோ அவன் இறந்து போனவனாகி விடுகிறான். எப்படி வாழ்வதற்கு மூச்சுவிட வேண்டியது அவசியமாகிறதோ அப்படியே அன்புக்காக அன்பு செலுத்துவதும் அவசியமாகிறது.
காந்தியும் விவேகானந்தரும் கீதையின் போதனையிலே பெரிதும் ஈடுபட்டவர்கள். உலகத்திற்கேற்ற ஒரு பொதுக் கிரந்தமாக இருவரும் இதனைக் கருதுகிறார்கள். காந்தி, பாரிடர் பரீட்சைக்குப் படிக்க இங்கிலாந்து சென்றாரல்லவா? அங்குதான் இவருக்குக் கீதையின் பரிச்சயம் உண்டாயிற்று. இந்தக் கிரந்தம் விலை மதிக்கவொண்ணாதது என்று எனக்குப்பட்டது. அந்த எண்ணம் எனக்கு வர வர வலுத்துக்கொண்டு வருகிறது. மெய்ப் பொருளை அறிவதற்கு அது மிகவும் ஏற்றது. உயர்ந்தது என்பது என் அபிப்பிராயம். நான் மனச் சோர்வு அடைந்திருக்கிற காலங் களில் அஃதெனக்குப் பெரிதும் உதவியாயிருக்கிறது என்று கூறுகிறார்.
பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கே பல போராட்டங் களில் ஈடுபட்டிருந்த காலத்தில் இவருக்கு சாந்தியைக் கொடுத்தது இந்த பகவத் கீதைதான். இந்தக் காலத்தில்தான் இவர் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்தார். மனப்பாடம் செய்வதற்கு இவர் தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவில்லை. காலையில் பல் துலக்குகிற போதும், நானஞ் செய்கிற போதும், சுவரில் ஒரு சுலோகத்தை எழுதி வைத்துவிட்டு அதைப் பார்த்து மனப்பாடஞ் செய்துகொண்டே பல் துலக்குவார்; நானஞ் செய்து முடிப்பார். இப்படியே தினம் ஒரு சுலோகமாக, கீதை பூராவையும் மனப் பாடஞ் செய்துவிட்டார். கீதையை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த பிறகுதான் தமக்குத் துறவு மனப்பான்மை ஏற்பட்டதென்று இவர் கூறுகிறார். இதன் பயனாக இவர் இன்ஷ்யூரென் கட்டிக்கொண்டு வந்ததைக் கூட நிறுத்திவிட்டார். என்னையும் என் மனைவி மக்களையும் படைத்த கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற உறுதி இவருக்கு ஏற்பட்டது. அது வரையில் தாம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்ததையெல்லாம் தமது சகோதரருக்குக் கொடுத்து விட்டார். கீதை, இவரை ஒரு மகா தியாகியாக்கிவிட்டது. கீதையின் நோக்கமும் இதுதானே?
விவேகானந்தர், சிக்காகோ சர்வ சமய மகா நாட்டில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தபோது யாவர் என்னை எங்ஙனம் வேண்டு கிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா! மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள் என்ற கீதா சுலோகத்தை எடுத்துச் சொல்லி, ஹிந்து மதத்தின் சமரஸத் தன்மையை விளக்கிக் காட்டினார். கீதையை எல்லோரும் பயில வேண்டுமென்பது இவர் விருப்பம். ஏனென்றால் இது மனிதனுக்குக் கடமை இன்னதென்பதைத் தெரிவிக்கிறது; வீரத்தை ஊட்டுகிறது. இந்த இரண்டுந்தான் இன்றைய இந்தியாவுக்கு அவசியம் தேவை. இதனை இந்தியர்கள் எல்லோரும், எந்தக் கவனத் துடன் படிக்கவேண்டுமோ அந்தக் கவனத்துடன் படிக்கவில்லை யென்பதற்காக இவர் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு.
கீதையென்பது, மோட்ச லோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஓர் ஏணியென்று சிலர் கருதுகிறார்கள். இது மிகத் தவறு. கீதை, நமது அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணை; மன அமைதி கொடுக்கும் அருமருந்து; பற்றில்லாமல் சேவை செய்துகொண் டிருப்பதிலேதான் உண்மையான இன்பம் இருக்கிறதென்பதை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட பொக்கிஷத்தை நாம் பெற்றிருந்தும் அதனை உபயோகத்திற்குக் கொண்டு வராமல் இருக்கிறோம். என்ன ஆச்சரியம்! இனியேனும் நமது இளைஞர்கள், காந்தியைப் பின்பற்றுவதாகச் சொல்லால் முழக்கும் இளைஞர்கள், அவரைப் போல் தினந்தோறும் ஒரு சுலோகத்தை மனப்பாடஞ் செய்வார்களா? நிச்சயம் அது நம்மைச் சுயராஜ்ய பாதையில் சீக்கிரம் கொண்டுவிடும்.
காந்தியும் விவேகானந்தரும் சிறந்த பக்தர்கள்; கடவுளின் புகழைப் பாடி அதில் மெய் மறந்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள். இதனாலேயே இவர்களுடைய மனம் எவ்வித சஞ்சலத்திற்கும் உள்ளாகாமல் எப்பொழுதும் ஒரு சாந்த நிலையில் நிற்கிறது. இவர்கள் கடவுள் புகழைப் பாடுகிறார்கள்; கடவுள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்; கடவுள் ராஜ்யத்தை இந்தப் பூலோகத்தில் தாபிக்க வேண்டுமென்பதற்காக ஓயாமல் உழைக்கிறார்கள்; அந்த உழைப்பிலே இன்பம் நுகர்கிறார்கள்.
விவேகானந்தர் ஏன் அமெரிக்கா சென்றார்?
1892ஆம் வருஷக் கடைசி. குமரிமுனையிலுள்ள ஒரு சிறிய பாறையின் மீது விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார். அவர் முதத்திலே ராஜகளை; உதட்டிலே புன் சிரிப்பு. முந்தைய பாரதத்தின் பெருமையும் இன்றைய பாரதத்தின் ஆவலும் ஓர் உருவாகத் திரண்டு வந்து அன்னையே! நின் சரணம் என்று பாரதத் தாயின் திருவடியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போலிருக்கிறது அந்தத் திருக்காட்சி.
சிறிது நேர தியானத்திற்குப் பிறகு விவேகானந்தருடைய மெய் சிலிர்த்தது. கண்கள் நீர் பெருக்கின. எனது தாய்நாடு? எனது தாய் நாடு என்ற வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வந்தன. தாய்நாட்டு மக்களை நினைத்துக் கொண்டு விட்டார். அதுதான் இவைகளுக் கெல்லாம் காரணம்.
கன்னியாகுமரியை வந்தடைவதற்கு முன்னர் விவேகானந்தர் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்தார். வேடிக்கை பார்க்கச் செல்லும் பிரயாணியைப் போலல்ல; மெய்ப் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மெய்ஞ் ஞானியைப் போல. முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று ஒரு காலத்தில் பெருமையோடு அழைக்கப்பட்டு வந்த இந்திய மக்கள் இப்பொழுது உதிர் சருகு களைப் போலிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் மூச்சை அடக்கினார்கள். இப்பொழுது மூச்சு விடுவதற்குக் கூட இவர் களுக்குத் திராணியில்லை. இந்தியாவில் எத்தனையோ அரசர்கள் ஆண்டார்கள்; ஞானமென்றும் மோனமென்றும் எத்தனையோ பேர் உபதேசம் செய்தார்கள். அநித்தியமான இந்த உலகத்தைத் துறந்துவிட்டு நித்தியமான வாழ்வை நாடிச் சென்ற சந்நியாசிகள்தான் எத்தனை பேர்? ஆனால் இவர்களெல்லோரும் பாமர ஜனங்களுக்குச் செய்தது என்ன? அவர்களுக்குத் தத்துவ ஞானத்தை உபதேசித் தார்கள்! என்ன பைத்தியக்காரத்தனம்! லட்சக்கணக்கான இந்த அந்த ஏழை மக்கள், வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல் அலைகிற போது அவர்கள் ஆன்மார்த்தமாக மேல் நோக்கிச் செல்வதெப்படி? இகலோகத்தில் வாழ்வதெப்படி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலல்லவோ, பரலோகத்தைப் பற்றிய எண்ணம் அவர் களுக்கு உண்டாகும்? எனவே, முதலில் அவர்களுக்குக் கவலையின்றி வாழக்கூடிய சௌகரியங்களைச் செய்து கொடுக்க வேண்டும். பின்னர், அவர்கள், தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். இதற்குத் தொண்டர்களும் பணமும் தேவை.
விவேகானந்தர், தம்முடைய சுற்றுப் பிரயாணத்தின் போது இந்தத் தேவையை நன்கு உணர்ந்து கொண்டார். ஆனால் தாம் என்ன செய்ய முடியும்? கையிலே காசில்லை; முற்றுந் துறந்த துறவி. அடிக்கடி ஏக்கங் கொள்வார்; இந்திய மக்களுக்கு ஏதேனும் விமோசனம் ஏற்படுமாவென்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார். இந்த மாதிரியான ஒரு மனோ நிலைமையில்தான் இவர், மேலே சொன்ன பிரகாரம் தியானத்திலே அமர்ந்தார்.
சில மணி நேரங் கழித்து, தமது தேகத்தை உதறிக் கொண்டு எழுந்து நின்றார், கண் மூடிக் கொண்டிருந்த சிம்மம் தேகத்தை உதறிக்கொண்டு எழுந்து நிற்பதைப் போல. ஆரம்பத்தில் இவரிடமிருந்த ஏக்கம், என்ன செய்வது என்ற கேள்வி ஆகிய எல்லாம் பறந்துவிட்டன. அவைகளை யெல்லாம் உதறித் தள்ளி விட்டதைப் போலவே தம் தேகத்தை உதறிக் கொண்டார். முக் கடலையும் நோக்கினார்; தமது தாய்நாட்டைத் திரும்பிப் பார்த்தார். மனதில் ஓர் ஒளி உண்டாயிற்று. புதிய சக்தி பெற்றவர் போலானார். சங்கல்பம் செய்து கொண்டார்: எனது குருநாதரின் திருவருளால் இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பேன். அவருடைய ஆசீர்வாத பலத்தினால், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஏழை மக்களின் பரிதாப நிலையைக் கண்டு துடிதுடிக்கிற, அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணம் செய்யக் கூடிய இருபதுக்கணக்கான தொண்டர்கள் தோன்றுவார்கள். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? இந்தக் கவலையுடனும் ஏதேனும் செய்ய வேண்டுமே யென்ற எண்ணத்துடனும் இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் சுற்றி வந்தேன். பணக்காரர்களுடைய மாளிகைகளுக்குச் சென்றேன்; அரசர் களுடைய அரண்மனை களுக்குச் சென்றேன். எதற்கு? உதவி பெறும் பொருட்டு. ஆனால் கிடைத்தது என்ன? உதட்டளவிலே அநுதாபம்! ஹிந்துதானத்தி லுள்ள யாருடைய ஆதரவையும் இனி நாடமாட்டேன். இந்தியாவி லுள்ள லட்சக்கணக்கான ஜனங்களின் சார்பாகக் கடலைக் கடந்து மேனாடுகளுக்குச் செல்வேன். என் அறிவுத் திறமையினால் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவேன். வந்து, இந்த ஏழை ஜனங்களின் புனருத்தாரணத்திற்காக நான் வகுத்திருக்கிற திட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவேன்; அல்லது அந்த முயற்சி யிலே இறந்து போவேன்.
விவேகானந்தர், இந்தமாதிரி சங்கற்பித்துக் கொண்டது எங்கே? கன்னியாகுமரியில்! தமிழ்நாட்டில்! தமிழ்நாடே! நீ என்ன பாக்கியம் செய்தாய்! இந்தப் பாக்கியம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த தற்கு மற்றொரு முக்கிய காரண புருஷராயிருந்தவர் அப்பொழுதைய ராமநாதபுரத்து அரசர் பாகர சேதுபதி அவர்கள். விவேகானந்த ருடைய பெருமையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். தம்முடைய விருந்தினராக சுவாமிகள் இருந்தபோது, அமெரிக்காவுக்குச் சென்று ஹிந்து மதத்தை பிரபலப்படுத்த வேண்டு மென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார்: அதற்கான உதவிகளையும் தாம் செய்வதாக வாக்களித்தார். தமிழ் மரபிலே வந்த தமிழ் மன்னரல்லவா?
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார் விவேகானந்தர். அப்பொழுது சென்னையில் ஆங்கில வாடை வேக மாக வீசிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தைப் படிப்பதும் ஆங்கிலத் தில் பேசுவதும் கௌரவமென்று இளைஞர்கள் கருதிக்கொண் டிருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்கள்தான், விவேகானந்தரைச் சந்தித்த சிறிது காலத்திற்குள் இவருடைய அத்தியந்த சிஷ்யர்களாகி விட்டார்கள்!
உலகத்தினரெல்லோரும் விவேகானந்தரைப் போற்றினார்க ளென்று சொன்னால் அதற்கு முதன் முதல் வழி காட்டியது சென்னைதான். ஆசார சீர்திருத்தமென்ற பெயரால் ஹிந்து மதத்தை ஏளனம் செய்து வந்த இளைஞர்கள் பலர், விவேகானந்தரின் முதற் சிஷ்யர்களானது சென்னையில்தான். விவேகானந்தர் அமெரிக்கா செல்லுவதற்கென்று முதன் முதலாக ஒரு நிதி திரட்டப்பட்டது சென்னையில்தான். விவேகானந்தரின் உணர்ச்சி ததும்பும் பிரசங் கங்கள் நிகழ்ந்தது சென்னையில்தான். ஆங்காங்கு மடங்களை தாபித்தல், நூல்களை வெளியிடுதல் ஆகிய விவேகானந்தருடைய திட்டங்களை முதன் முதலாக நிறைவேற்றி வைத்தது சென்னை தான். விவேகானந்தர், மேனாடுகளுக்குச் சென்றிருந்தபோது அவருடைய உபதேசங்கள் இந்தியா வெங்கணும் பரவுவதற்குத் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டார்கள் சென்னை வாசிகள்தான். வாழியரோ சென்னையர்!
விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் காற்றுவாங்கக் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அங்கே செம்பட வர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டார். கண்கலங்கினார். வாய்விட்டுப் புலம்பினார்: ஓ! கடவுளே! மகா கேவலமான இந்த மனித ஜென்மங்களை ஏன் படைத்தாய்? இவர்களைப் பார்ப்ப தற்குக்கூட என்னால் சகிக்க முடியவில்லையே. எவ்வளவு காலம் இப்படி? கடவுளே! எவ்வளவு காலம் இப்படி? இவர் கண்களி லிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. பக்கத்திலிருந்தவர்கள் இதைப் பார்த்தார்கள். அவர்களும் குழந்தைகள் மாதிரி கூடவே அழ ஆரம்பித்து விட்டார்கள். ஏழைகளைக் கண்ட மாத்திரத்தில் விவேகானந்தரின் உள்ளம் புழுப்போல் துடித்தது; மெழுகுபோல் உருகியது.
விவேகானந்தர், அமெரிக்கா செல்லவேண்டிய அவசியத்தைச் சென்னையிலேயே அதிகமாக உணர்ந்தார். வரவர இந்த ஓர் எண்ணமே இவர் உள்ளத்தை நிரப்பிக்கொண்டு வந்தது. இவருடைய ஆவலை அறிந்த இவருடைய சிஷ்யர்கள், ஒரு தொண்டர்படையை அமைத்துக்கொண்டு நிதி வசூலிக்கப் புறப்பட்டார்கள். வீடு தோறும் சென்று பணம் தண்டினார்கள். இவர்கள், பணக்காரர்கள் வீட்டுக்கு அதிகமாகச் செல்லவில்லை; மத்திய வகுப்பாரிடமே சென்றார்கள். ஏனென்றால் விவேகானந்தர், இவர்களுக்குப் பிறப்பித்திருந்த ஆணையென்னவென்றால் நான் அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது ஜகதீசுவரியின் விருப்பமானால், அதற்காக நான் ஜனங்களிடமிருந்தே பணம் பெறவேண்டும். ஏனெனின் இந்திய மகாஜனங்களுடைய நன்மைக்காகவே நான் மேனாட்டுக்குச் செல்கிறேன். அவர்களுக்காகவே, அந்த ஏழை ஜனங்களுக்காகவே செல்கிறேன் என்பதாகும்.
இங்ஙனம் அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தனவென்றாலும், விவேகானந்தர், உடனே துணிந்து புறப்படவில்லை. உலகத்தை ஈன்று புரக்கும் ஜகன் மாதாவின் ஆணை தமக்குக் கிடைக்கவில்லை, அது கிடைத்த பிறகுதான் புறப் படவேண்டும் என்கிற மாதிரியான ஓர் எண்ணம் இவர் மனதில் இருந்து கொண்டிருந்தது. அப்படியே ஒருநாள், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றி தம்மைச் சமுத்திரத்தின்மீது அழைத்துச் செல்வதாக ஒரு கனவு கண்டார். குருவின் ஆணை பிறந்துவிட்டதாக உணர்ந்தார். பின்னரே பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்யப் பட்டன. அதே சமயத்தில், குரு பத்தினியான ஸ்ரீ சாரதாமணி தேவியின் ஆசீர்வாத மும் கிடைத்தது. கடைசியில் 1893-ஆம் வருஷம் மே மாதம் 31-ஆம் தேதி சிஷ்யர்கள் அடிபணிந்தார்கள்; நண்பர்கள் கண்ணீர் பெருக்கி னார்கள் மாதா! வணக்கம் என்று சொல்லிக் கொண்டு கப்பலேறி னார் விவேகானந்தர். கப்பலும் நகர்ந்தது. துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நாட்டிலிருந்து போகநாட்டிற்குச் செல்கிறேன் என்ற வார்த்தைகள் விவேகானந்தருடைய வாயிலிருந்து வெளிவந்தன.
போக நாட்டிற்கு ஏன் சென்றார் விவேகானந்தர்? போகத்தை அனுபவிப்பதற்கா? அபசாரம்?! அபசாரம்! போகத்திற்கும் இவருக்கும் எவ்வளவு தூரம்? அல்லது சிக்காகோவில் கூடப் போகிற சர்வ சமய மகாநாட்டிற்குச் சென்று ஹிந்து மதத்தின் புராதனத்தையும் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காகவா? ஆம்; அஃதொரு காரணந்தான். ஆனால் அதுவே காரியமில்லை. சென்னையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்:
தேசபக்தி, தேசபக்தி என்று சொல்கிறார்கள். நான்கூட ஒரு தேசபக்தன் தான். எனக்குக்கூட தேச பக்தியிலே நம்பிக்கையுண்டு…. ஆனால் சகோதரர்களே! நீங்கள் மனப்பூர்வமாக உணர்கிறீர்களா? கடவுளர்களின் வழித் தோன்றல் களென்றும் ரிஷி பரம்பரையினர் என்றும் சொல்லப்படுகிற லட்சக் கணக்கான பாரதநாட்டு மக்கள், இப்பொழுது மிருகங்களுக்கு அடுத் படியான வாழ்க்கையை நடத்து கிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர் களா? லட்சக்கணக் கானபேர் இன்றைய தினம் பட்டினி கிடக்கிறார்கள், லட்சக்கணக் கானபேர் நாட்கள் கணக்காகப் பட்டினி கிடந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? கருமேகம்போல் நமது நாட்டை அறியாமை சூழ்ந்துகொண்டிருக்கிறதென்பதை நீங்கள் உணர்கிறீர் களா? இதனால் உங்கள் மனம் பதை பதைக்கிறதா? இரவில் தூக்கம் வராமலிருக்கிறதா? இந்த உணர்ச்சி உங்களுடைய ரத்தத்திலே ஊறி, நரம்புகளிலே புகுந்து, இருதயத் துடிப்போடு ஒன்றாகி விட்டதா? இந்த உணர்ச்சி உங்களை ஒரு பித்துபோல் ஆக்கி விட்டதா? பெயர், புகழ், மனைவி, மக்கள், சொத்து, தேகாபிமானம் முதலிய எல்லா வற்றையும் மறந்து இந்த ஏழை மக்களின் துயரம் ஒன்றையே நீங்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறீர்களா? இந்த நிலையை நீங்கள் அடைந்தீர் களானால் அதுதான் உங்கள் தேசபக்திக்கு முதல்படி. சர்வ சமய மகாநாட்டை உத்தேசித்து நான் அமெரிக்கா செல்லவில்லையென்பது உங்களிற் பலருக்குத் தெரியும். மேலே சொன்ன இந்த உணர்ச்சிதான், என்னிடத்தில் ஊறியிருந்தது; என்னுடைய ஆத்மாவைப் பற்றிக் கொண்டிருந்தது. இந்தியா முழுவதிலும் பன்னிரண்டு வருஷகாலம் சுற்றுப்பிர யாணம் செய்தேன். என் தாய்நாட்டு மக்களுக்கு எப்படித் தொண்டு செய்வ தென்பதற்கு எனக்கு வழி புலப்படவில்லை. அதனாலேயே நான் அமெரிக்கா சென்றேன். என்னை அறிந்தவர்களுக்கு இது தெரியும். சர்வ சமய மகாநாட்டைப்பற்றி யார் கவலைப்பட் டார்கள்? என்னுடைய சதையும் ரத்தமும் தினந்தோறும் குன்றிக் கொண்டு வர, அவைகளைப்பற்றி - மகாநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி - யாருக்கு என்ன கவலை?
எனவே, விவேகானந்தர் எந்த நோக்கோடு அமெரிக்கா சென்றார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது. சர்வ சமய மகாநாடென்பது ஒரு சந்தர்ப்பந்தானே தவிர அதுவே இவருடைய நோக்கமில்லை. இந்தியாவின் ஏழைமக்களைக் கை தூக்கிவிட வேண்டுமென்பதுவே இவர் நோக்கம். அதற்காகவே இவர் தமது சர்வத்தையும் தியாகம் செய்தார்; உணர்ச்சி வசப்பட்டு அநேக சமயங்களில் தன்வசமிழந்தும் நின்றார். அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, இந்தியாவிலுள்ள தமது சிஷ்யர்களுக்கு ஒரு கடிதத்தின்மூலம் எப்படி உணர்ச்சி ஊட்டுகிறார் பாருங்கள்:
எனது இளைஞர்களே! மடி கட்டிக்கொள்ளுங்கள். நான் உங்களிடத்திலேதான், அடக்கமுள்ள, கீழானவர்களென்று கருதப் படுகின்ற, ஆனால் தன்னம்பிக்கையுள்ள உங்களிடத்திலேதான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். கொள்கை, கொள்கையென்று கட்டிக்கொண்டு அழாதீர்கள். அஃதொன்று மில்லை. ஏழை மக்களுக்கு இரக்கங் காட்டுங்கள். உங்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கும்… ரத்தம் வடிகிற உள்ளத்தோடு, உலகத்தின் பாதி பாகத்தைக் கடந்து இந்தப் புதிய நாட்டுக்கு வந்திருக்கிறேன். எதற்கு, உதவி பெறும் பொருட்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அவர் எனக்கு உதவி செய்வார். அஃதெனக்கு நன்றாகத் தெரியும். நான் இந்த நாட்டிலே குளிரினாலும் பட்டினியினாலும் இறந்து போகலாம். ஆனால் இளைஞர்களே! ஏழை மக்களிடத்திலே, பாமர ஜனங்களிடத்திலே, ஒடுக்கப் பட்டவர்களிடத்திலே நான் செலுத்துகிற அநுதாபத்தை, அவர்களுக்காக நான் நடத்துகிற போராட்டத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போவேன். கடவுள் முன்னிலையில் தைரிய மாகச் செல்லுங்கள். பாரதநாட்டு முப்பதுகோடி மக்களுக்காக, (இப்பொழுது நாற்பதுகோடி )நாளுக்குநாள்கீழேபோய்க்கொண்டிருக்கும்இந்தஏழைஜனங்களின்விமோசனத்திற்காக,எங்களுடையவாழ்க்கைமுழுவதையும்அர்ப்பணம்செய்கிறோம்என்றுபிரதிக்ஞை செய்துகொள்ளுங்கள் கடவுட் கிருபையால் நாம் வெற்றியடைவோம். நமது போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர் வீழ்ந்து படலாம். ஆனால் நூற்றுக் கணக்கான பேர் அந்த இடத்தைப் பூர்த்திசெய்ய முன்வருவர். நான் இங்கு வெற்றி யடையாமல் இறந்து போகலாம். ஆனால் என்னுடைய வேலையை வேறொருவர்மேல் போட்டுக் கொண்டு நடத்துவர். உங்களுக்கு வியாதி இன்னதென்று தெரியும்; அதற்குப்பரிகாரமும்தெரியும். உங்களுக்கு வேண்டியது நம்பிக்கைதான்…வாழ்வா, சாவா, பட்டினியா, குளிரா, இவையெல் லாம் என்ன அவ்வளவு பிரமாதமான விஷயம்? இவைகளைப் பொருட்படுத்தவ படுத்தாதீர்கள். கடவுளை நம் முன்னெ செல்லுங்கள். அவரே, அந்தக் கடவுளே, நமக்குத் தலைவர். அப்படிச் செல்லுகிற போது, யாரார் வழியில் விழுந்து விட்டார்க ளென்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு செல்லாதீர்கள். முன்னோக்கியே செல்லுங்கள். முன்னோக்கிக் கொண்டு போவீர்கள்.
இங்கே ஒரு விஷயம். விவேகானந்தர், அமெரிக்காவுக்குச் சென்றது, இந்தியாவுக்கு உதவி தேடிக் கொண்டு வரும்பொருட்டு மட்டுந்தான் என்று நினையாதீர்கள். மகான்கள், எப்பொழுதுமே பிறருடைய தயவை எதிர் பார்க்கமாட்டார்கள். சிறிய ஒன்றை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டால், அவர்கள், பெரிய ஒன்றைக் கொடுத்துவிட்டுத்தான் அந்தச் சிறிய ஒன்றைப் பெறுவார்கள்.
விவேகானந்தர் ஒரு சமயம் மைசூர் மன்னரிடம் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இந்தியாவினுடைய ஆத்ம ஞானத்தை அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டு அதற்குப் பதில், இந்தியர் களுடைய லௌகிக வாழ்க்கைக்காக ஏதேனும் உதவி தேடிக்கொண்டு வரலா மென்பதற்காகவே தாம் அமெரிக்கா செல்ல வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார். இன்னும் அமெரிக்காவிலிருந்து இந்தியா விலுள்ள தமது நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: நமது தேசத்தில் சமுதாய நற் குணங்கள் (அதாவது சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் நன்றாக வாழவேண்டும், அதற்காக நாம் பாடுபடவேண்டும் என்கிற எண்ணம் முதலியன) குறைவாயிருக் கின்றன. இங்கே, அமெரிக்கா வில், பாரமார்த்திக வாழ்வென்பது சூனியமா யிருக்கிறது. இந்தியா வின் பாரமார்த்திக ஞானத்தை நான் இவர்களுக்குக் கொடுக்கிறேன். இவர்கள் எனக்கு (இந்தியாவுக்காக)ப் பணம் கொடுக்கிறார்கள்.
எனவே, விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றாரென் றால் அங்கிருந்து இலவசமாக உதவி பெற்றுக்கொண்டு வருவதற் காக அல்ல. ஆத்ம ஞானத்தை அவர்களுக்கு அளித்துவிட்டு, அதற்கு ஒரு சிறு பிரதியாகவே, இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான சில உதவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார். ஆம், அழியாச் செல் வத்தைக் கொடுத்துவிட்டு அழியுஞ் செல்வத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.
காந்தி ஏன் ஒரு விவசாயி?
காந்தி, மேனாட்டு நடனம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்தவர். நியாயவாதியாக இருந்து ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர். இன்றைய நாகரிகம் என்று எதைச் சொல்லுகிறோமோ அதன் பல கூறுகளையும் நன்றாக அனுபவித்தவர். ஆங்கில பாஷையை, அதன் கம்பீரமும் அழகும் குன்றாமல் எழுதுவதிலும் பேசுவதிலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகத்திலேயே ஒரு சிலர்தான் இருக்கின்றனர் என்பதை ஆங்கில அறிஞர்கள் அனைவரும் அங்கீ கரித்துக் கொண்டிருக்கின்றனர். உலகத்திலேயே மிகச் சிறந்த கிறிதுவராக ஒரு ஹிந்து இருக்கிறார்: அவர்தான் காந்தி என்று கிறிதுவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கொண்டாடு கிறார்கள். நான், ரோமெய்ன் ரோலாந்தைப் பற்றி நினைக்கிற போது டால்டாயின் ஞாபகம் வருகிறது: லெனினைப்பற்றி நினைக்கிற போது நெப்போலியனுடைய ஞாபகம் வருகிறது: ஆனால் காந்தியைப் பற்றி நினைக்கிறபோது யேசுகிறிதுவின் ஞாபகம் வருகிறது என்று அமெரிக்கப் பாதிரியான ஜே. எச். ஹோம் என்பவர் கூறுகிறார். இங்ஙனம் எல்லாம் தெரிந்த, எல்லோராலும் தங்கள் தங்களுடையவரென்று கொண்டாட்டப் பெறுகின்ற காந்தி, தம்மை என்னவென்று அழைத்துக் கொள்கிறார்? நான் ஒரு விவசாயி; எனது தொழில் நெசவுத் தொழில் என்று சொல்லிக் கொள்கிறார்.
இங்ஙனம் இவர் தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவுத் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வதன் நோக்கமென்ன?
உலகத்திலே மற்றவர்களுக்காக வாழ்கின்ற மகா புருஷர்கள் அத்தனைபேரும் எவ்விதமான கட்டுப்பாடுகளுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளச் சம்மதிக்கிறார்களில்லை; சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறார்கள். தங்களுடைய ஜீவனோபாயத்திற்காக, சுதந்திரமாயுள்ள ஒரு தொழிலில் ஈடுபடு கிறார்கள். அப்படி ஈடுபடுகிற போது ஏதேனும் கஷ்ட நிஷ்டூரங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுமையோடு சகித்துக் கொள் கிறார்கள். அவர்களுக்கு முக்கியமான தேவை சுதந்திர வாழ்க்கையே.
உலக ரீதியாகப் பார்க்கிறபோது சுதந்திர வாழ்க்கை நடத்து கிறவர்களுக்கு அதிகமான செல்வம் கிடைக்காமலிருக்கலாம்; பட்டம் பதவி முதலியன கிட்டாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளத்திலே வீரமும் ஈரமும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர்கள் நமனுக்கஞ்சார்; தம்பிணியறியார்; யாருக்கும் பணியார். ஆனால் பொய்மைக்கு அஞ்சுவார்; பிறர் பிணிகளை நன்கறிவார். அடக்கமே அவர் அணிகலன். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உலகத்திற்கு அடிமைகளல்லர்; உலகத்தை அடிமையாகக் கொண்ட வர்கள்.
சுதந்திர வாழ்க்கை நடத்துகிறவர்களால்தான் நல்ல சிருஷ்டி களைச் செய்ய முடியும். தங்களுடைய சந்தோஷத்திற்காக அவர்கள் ஏதொன்றினையும் சிருஷ்டிப்பதில்லை; மற்றவர்களுடைய நன்மைக் காகவே சிருஷ்டி செய்கிறார்கள். அந்தச் செய்கையில்தான் அவர்கள் இன்பம் நுகர்கிறார்கள்: அதன் பலனில் அல்ல. அவர்கள் ஆடம் பரத்தை வெறுக்கிறார்கள்; இயற்கை வாழ்விலே இனிமையைக் காண்கிறார்கள்; இவைகளுக்கெல்லாம் அனுகூலமாயிருக்கிற முறையிலேயே தங்கள் ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்கிறார்கள்.
சாதாரணமாக நாம் பார்க்கலாம், மானிட ஜாதியின் எண்ணப் போக்கில் யாரார் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறார்களோ அவர்களெல்லோரும் ஏதேனும் சுதந்திரமான ஒரு தொழிலைத் தங்களுடைய ஜீவனோபாயமாகக் கொண்டிருப்பதை. அந்தத் தொழில் பிறருக்கு உபகாரமாக இருக்கிற தொழிலாக இருக்குமே தவிர யாரையும் சுரண்டுவதாயிராது; யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதாயிராது. தாங்கள் செய்கிற சிருஷ்டிக்கோ அல்லது மற்ற நற்காரியங்களுக்கோ, தாங்கள் மேற்கொண்டிருக்கிற தொழில் ஒரு சாதனம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்குத் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; அதில் ஈடும்படு கிறார்கள்.
தனது அறியாமையை அறிந்து கொண்டிருந்த அறிஞனாகிய ஸாக்ரடீ (கி.மு. 470-399) ஒரு சிற்பி. அரிடாட்டல் (கி.மு. 384-322) ஒரு வைத்தியன். கலீலியோ (1564-1642) என்ற வான சாதிரி ஒரு கணித ஆசிரியன். கார்ல் மார்க் (1818-1883) ஒரு பத்திரிகாசிரி யன். திருவள்ளுவர் நெசவுத் தொழில் நடத்தி ஜீவனம் செய்து வந்தார். ராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மளிகைக் கடை வைத்திருந்தார்.
மனிதனுக்கு முதல் தேவை உணவு. இரண்டாவது உடை. பிறகுதான் அறிவு, ஆத்மா முதலியனவெல்லாம். உலகத்திற்கு உணவை வழங்கு கிறவன் விவசாயி; உடையை வழங்குகிறவன் நெசவுத் தொழிலாளி. முன்னவன், பட்டினியைப் போக்குகிறான்; பின்னவன் மானத்தை மூடுகிறான். இவை இரண்டுமே உலகத்தில் சிறந்த தொழில்கள் என்பது அறிஞர்கள் துணிபு. இந்த இரண்டு தொழில்களிலும் அடிமை நாற்றமே கிடையாது; சுதந்திர மணம் எப்பொழுதும் கமழ்ந்து கொண்டிருக்கிறது.
உழுதுண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்வு; சுதந்திர வாழ்வு. உழவரையொட்டியே உலகம் இயங்குகிறது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி அஃது ஆற்றாது, எழுவாரையெல்லாம் பொறுத்து என்பது திருக்குறள். உலகமென்னும் தேருக்கு அச்சாணி போன்ற வர்கள் விவசாயிகள். இவர்களைத்தான், ஒரு ராஜ்யத்தின் உரிமை யுள்ள பிரஜைகள் என்று சொல்லவேண்டும்.
இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், இந்திய நாகரிகம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் சொல் கிறார்கள். இதன் கருத்து என்ன? இந்தியர்கள் சுதந்திரமான ஒரு தொழிலை தங்கள் ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தார்க ளென்பதும், சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகமே இந்தியர்களுடைய நாகரிக மென்பதுமே அர்த்தம். இன்றைய யந்திர நாகரிகத்தின் கீழ், முதலாளி நாகரிகத்தின் கீழ், விவசாயத்திற்கு மதிப்பு இல்லாமல் போயிருக்கலாம்; இதன் சுதந்திரத் தன்மையை யாரும் உணராமலிருக்கலாம். ஆனால் உலகத்தில் நிரந்தரமான சாந்தி நிலவ வேண்டுமானால், விவசாயத்தை யாரும் கௌரவித்தே ஆகவேண்டும். விவசாய நாகரிகந்தான் இயற்கை நாகரிகம். இந்த நாகரிகத்தின் கீழ்தான் மனிதனாகப் பிறந்தவன், மனிதனாக வாழ முடியும். இந்த விவசாய நாகரிகத்தின் பிரதிநிதியாகவே இன்று காந்தி விளங்குகிறார். இதனாலேயே இவரைத் தங்களுடைய பிரதிநிதி என்று இந்திய மகாஜனங்கள் கொண்டாடுகிறார்கள்.
படித்தவர்களென்ற அகந்தையோடிருக்கிறவர்கள், விவசாய ஜனங் களைப் பார்த்து, பாமர மக்களென்றும், படிப்பு வாசனை யில்லாதவர் களென்றும் அலட்சியமாகப் பேசுகிறார்கள்; அவர் களைக் கை தூக்கிவிடப் போவதாகச் சொல்லிக் கொண்டு முன் வருகிறார்கள். என்ன பேதமை! பாமர ஜனங்களாகிய விவசாயிகள் கள்ளங்கபடில்லாதவர்கள்; விசாலமன முடையவர்கள்; அனுபவ ஞானம் நிறைந்தவர்கள். அவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்களிலே ஒருவராகத் தம்மை கருதிக் கொண்டிருக்கிறார் காந்தி.
படித்தவர்கள் என்று மேலே சொன்னோமே அவர்கள், காந்தி உபதேசிக்கிற சத்தியம் அஹிம்ஸை முதலியவைகளைப் பற்றி வாய் நிறையப் பேசுகிறார்கள்; கணக்கற்ற நூல்களைப் படிக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால் பாமர ஜனங்களென்று அநுதாபத்தோடு அழைக்கப்படுகிற இந்த விவசாயிகளோ, சத்தியத்தையும் அஹிம் ஸையையும் வாழ்ந்து காட்டுகிறார்கள். இவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று, நகரவாசி களுக்கு, அதாவது படித்தவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறவர்களுக்கு, காந்தி உபதேசம் செய்கிறார்:
இளைஞர்கள், நகரவாசத்தைவிட கிராம வாசத்தையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். இந்தியர் களாகிய நாம் கிராம நாகரிகத்தின் வார்சுதாரர்கள். நமது நாட்டின் விதீரணம், அதிக ஜனத் தொகை, சீதோஷ்ண திதி முதலிய நிலைமைகள் யாவும் சேர்ந்து நம்மைக் கிராம நாகரிகத்திற்கே தகுதியுடையவர்களாக்கியிருக்கின்றன. இந்த நாகரிகத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றனவென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இவைகளைக் களைய நாம் முயல வேண்டுமே தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு அப்புறப்படுத்தி விடுவதென்பது அசாத்தியமான காரியம்.
இன்னொரு விஷயம். நாம் யாரை கைதூக்கிவிட வேண்டு மென்று ஆசைப்படுகிறோமோ அவர்களை, அவர்களுடைய நிலைமையிலிருந்தே அணுக வேண்டும். உள்ளத்திலும் சரி, உடை யிலும் சரி, அப்பொழுதே அவர்கள் நம் வயப்படுவார்கள்; நாம் சொன்னதைக் கேட்பார்கள். அவர்களை நாம் முன்னேற்ற மார்க்கத் தில் அழைத்துச் செல்ல முடியும். காந்தி, செல்வாக்குப் பெற்றிருப் பதன் ரகசியம் என்னவென்றால் இவர், ஏழை நெஞ்சோடு ஏழை களை அணுகுகிறார். விவசாயிகளுக்கு இவர் ஒரு விவசாயி; தொழி லாளர்களுக்கு ஒரு தொழிலாளி. அவர்களுடைய கல்மஷமற்ற மனமும், காந்தியின் அன்பு நிறைந்த உள்ளமும் ஒன்றுகூடிப் பேசுகின்றன. இவரை, அந்த விவசாயிகளும் தொழிலாளிகளும் நம்புகிறார்கள்; இவர் காட்டுகிற வழியைப் பின்பற்றிச் செல்லச் சித்தமா யிருக்கிறார்கள்.
விவசாயத்தையும் நெசவுத் தொழிலையும் இந்தியர்களாகிய நாம் புறக்கணித்து விடுவோமானால் இந்திய ஜாதியே அழிந்து போய்விடும் என்பது காந்தியின் கருத்து. வேத காலத்திலிருந்து இந்தியர்கள் இந்த இரண்டு தொழில்களையும் அதிகமாகப் போற்றி வந்திருக்கிறார்கள். விவசாயத்திற்கு எவ்வித இடையூறும் ஏற் படாமல் அதனைப் பாதுகாத்து வருவது அரசனுடைய முக்கிய மான கடமைகளில் ஒன்று என சாணக்கியன் தனது அர்த்த சாதிரத்தில் குறிப்பிடுகிறான். இப்படிப் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிற இந்த ஜீவனோபாயத்தை நாம் அலட்சியப்படுத்தி விட்டோமானால் நம்முடைய நாகரிகத்தையே நாம் அலட்சியப் படுத்தியவர்களாவோம். அது, நம்மையே நாம் அலட்சியப்படுத்திக் கொண்டதாகுமல்லவா? தன் மதிப்பு இழந்தவன், உலகத்தில் மதிப்புடன் வாழ முடியாதென்பது வெள்ளிடை மலை. இதையே காந்தி பல சமயங்களிலும் வற்புறுத்திக் காட்டுகிறார்.
நூல் நூற்றலும் நெசவு நெய்தலும், விவசாயத்தைப் போலவே நமது நாகரிகத்தின் முதற் குழந்தை. இதனாலேயே காந்தி, விவசாயத்தையும் நெசவையும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட் டிருக்கிற இரட்டைத் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார். முற் காலத்தில், அந்நிய ஆதிக்கம் நமது நாட்டில் ஊர்ஜிதமாவதற்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிலும் கைராட்டினம் இருந்து கொண் டிருந்தது. பெண்கள் நூற்பார்கள்; ஆண்கள் நெய்வார்கள்.
அது மட்டுமல்லாமல், கைராட்டினமானது, மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும் ஒரு முகப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த சாதனம் என்று காந்தி அடிக்கடி வற்புறுத்தி வருவதைக் கேட்டுச் சில இளைஞர்களுக்குச் சலிப்புக் கூடத் தட்டியிருக்கலாம். ஆனால் இவர், அதன் மூலமாகக் கடவுளையும் காண முடியும் என்ற உறுதியோடு பேசுகிறார்; உலகத்திற்கு உயர்வு அளிக்கப்போவது இந்தக் கைராட்டினந்தான் என்று கூறுகிறார். மகா யுத்தத்திற்குப் பிறகு உலகம் சலித்துப் போயிருக்கிறது. இன்றைய தினம் இந்தியா வுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், நாளைய தினம் உலகத்திற்கே ஆறுதலையளிக்க கூடும். ஏனென்றால் இஃது அதிகமான பேருக்கு அதிகமான நன்மையைச் செய்வ தென்பதில்லாமல், எல்லாருக்கும் அதிகமான நன்மையைச் செய்யக் கூடியதாயிருக்கிறது…..பிரகலாதன் எப்படி ராமனை எங்குமே பார்த்தானோ, துளசி தாஸர் எப்படி கிருஷ்ண விக்ரகத்தில் கூட ராமனையே பார்த்தாரோ, அப்படியே சர்க்காவின் தத்துவங்களை அறியக் கூடிய வழியிலேயே உங்கள் படிப்பெல்லாம் செல்லட்டும் என்று மாணக்கர்களுக்கு ஒரு சமயம் உபதேசித் திருக்கிறார்.
இலங்கை இளைஞர்களுக்குச் செய்த ஒரு பிரசங்கத்தில், கைராட்டினத்தில் கடவுளின் திருக்கரம் வேலை செய்வதை நான் காண்கின்றேன். ஏனென்றால் மனிதவர்க்கத்திலே மிக மிகச் சாதாரணமா யுள்ளவர்களுடைய தேவைகளையும் இந்தக் கை ராட்டினம் பூர்த்தி செய்விக்கிறது. இதனாலேயே எப்பொழுதும் இதில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதனைப் பிரார்த் திக்கிறேன்; இதனைப் பற்றி எங்கும் பேசுகிறேன் என்று கூறுகிறார்.
கடவுள் நெறியில் கைகாட்டி அழைத்துச் செல்லும் கருவி யாகக் கைராட்டினம் இருக்கிறதென்று சொல்லும் விஷயத்தில் காந்தியே முதல்வரல்ல. இவருக்கு முன்னாடியே விவேகானந்தர், இந்தக் கைராட்டினத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கேளுங்கள்: கைராட்டினம் சுழற்றும் கிராமப் பெண் என்ன சொல்கிறாள்: என்னிடத்தில், கடவுள் வேறு நான் வேறு என்ற துவைத பாவனையில் பேசாதீர்கள். ஏனென்றால் நான் சுழற்றிக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், ஸோஹம், ஸோஹம், அதாவது அவனே நான், அவனே நான் என்று சொல்லிக்கொண்டே யிருக்கிறது. இந்த யந்திரங்கள், இந்த விஞ்ஞான சாதிரங்கள் முதலியவற்றினால் என்ன பிரயோஜனம்? இவைகளினால் அறிவு பரவுகிறதே அஃதொன்றுதான். ஜனங்களுடைய தேவையை இன்னும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. அதற்குப் பதிலாக அந்தத் தேவைப் பிரச்னையை இன்னும் அதிகமாக்கி விட்டீர்கள். யந்திரங் களினால் வறுமை தீரவே தீராது. அதற்கு மாறாக மனிதர்கள், அந்த யந்திரத்தின் காரணமாக, இன்னும் அதிகமாகப் போராடவே வேண்டியிருக் கிறது. போட்டி அதிகமாகிறது. ஒரு பொருள், எந்த அளவுக்குக் கடவுளைப் பிரத்தியட்சப் படுத்திக் காட்டுகிறதோ அந்த அளவைக் கொண்டே அதன் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, மனிதனுடைய புற வாழ்வு செம்மையுற நடைபெறு வதற்கு விவசாயமும், அகவாழ்வு பண்புற அமைவதற்கு நூற்றலும் நெசவும் துணை செய்கின்றன. இதனாலேயே இவையிரண்டையும் நாகரிகச் சின்னங்களாகக் கொண்டார்கள் நமது முன்னோர்கள். காந்தி, நமது நாகரிகத்தின் பிரதிநிதி. இதனாலேயே மேற்சொன்ன இரண்டையும், அதாவது விவசாயத்தையும் நூல் நூற்றலையும், அதிகமாக வற்புறுத்துகிறார். தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். இந்திய மகாஜனங்கள் இவரைப் போற்றிப் பின்பற்றுவதில் என்ன ஆச்சரியம்?
உலகத்திலுள்ள சர்வ மகா ஜனங்களும், காந்தியை, தங்களிலே ஒருவராக, தங்களுக்கு வழி காட்டும் நாயகராகக் கொண்டாடுவதன் ரகசியமும், இவர், தம்மை ஒரு விவசாயி என்றும் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வதுதான். எப்படியென்றால், உலகத்தில் பெரும்பான்மை யோர் விவசாயிகளும் தொழிலாளிகளுமாவர். இவர்கள், உழைத்துப் பிழைக்கிறவர்கள்; அற்ப சொற்பமான வருமானத்தைக் கொண்டு அன்றாட ஜீவனத்தை நடத்துகிறவர்கள். இவர்களுடைய சுக துக்கங்களை யார் தங்களுடைய சுக துக்கங் களாகக் கருதுகிறார்களோ அவர்களையே இவர்கள் தங்கள் தெய்வமாகப் போற்றுகிறார்கள். தங்களால் எட்டிப்பிடிக்க முடியாத தெய்வத்தை இவர்கள் எட்டவிருந்து பார்த்துவிட்டு, தங்களோடு உறவாடுகிற, தங்களுடைய உணர்ச்சிகளிலே கலக்கிற வர்கள் யாரோ அவர்களையே இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மனப்பான்மையிலே இருக்கும் இவர்கள், காந்தியை, அவருடைய உடையினாலும், உணவு கொள்ளுதல் முதலிய பழக்க வழக்கங் களினாலும் தம்மிலே ஒருவராகக் கருதிக்கொண்டுவிடுகிறார்கள். காந்தி, வட்டமேஜை மகாநாட்டை முன்னிட்டு 1931ஆம் வருஷம் லண்டன் சென்றிருந்த காலத்தில், ஏழை மக்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியிலேயே தங்கியிருந்தார். அங்கு வசித்தவர்கள் அத்தனை பேரும் தங்களிலே ஒருவர் வந்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் மத்தியில் காந்தியும் மனோ நிம்மதியுடன் இருந்தார்.
உலகத்திலே கீழான வகுப்பு என்று ஒரு வகுப்பு இருக்கு மானால் அதில் நான் ஒருவன்; குற்றவாளி என்று மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்களானால் அந்தக் குற்றவாளிகளில் நான் ஒருவன்; சிறையில் ஓர் ஆத்மா இருக்கிறவரையில் நான் சுதந்திர புருஷனல்ல என்று மேனாட்டு அறிஞன் ஒருவன் கூறுகிறான். காந்தி, இந்த வாசகத்தை வாழ்ந்து காட்டுகிறார்.
இரண்டு சக்திகள்
காந்தியும் விவேகானந்தரும் சாதாரண இரண்டு மனிதர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள் என்பது வாதவம். ஆனால் உண்மையில் இவர்கள் இரண்டு சக்திகள்; இரண்டு தாபனங்கள். இருவரிடமிருந்து இரண்டு இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஒன்று காந்தீயம்; மற்றொன்று ராமகிருஷ்ணர் இயக்கம். இரண்டும் இந்தியாவிலே தோன்றி, உலக முழுவதிலும் பரவியிருக்கின்றன. இந்த இயக்கங்களில் சம்பந்தப்பட்டவர்கள், வாழ்க்கையை ஒரு புதிய கோணத்திலிருந்து பார்க்கிறவர்கள்; தங்களுக்கென்று ஒன்று மில்லாதவர்கள்; ஆனால் உலகத்தையே தங்கள் குடும்பமாகக் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க!
காந்தி, ஒரு மகாத்மா. யாரொருவருடைய இருதயத்தி லிருந்து ஏழைகளுக்காக ரத்தம் வடிகிறதோ, அதாவது, யார் ஏழை களுடைய துன்பத்தைத் தங்களுடைய துன்பமாகக் கருதுகின் றனரோ அவர்தான் மகாத்மா; இல்லாவிட்டால் அவர் துராத்மா என்பது விவேகானந்தர் வாக்கு.
விவேகானந்தர் ஒரு துறவி. துறவு என்பது என்ன? காந்தி கூறுகிறார்: செயலில், செயலின் மூலமாகத் துறவு காண வேண்டும். செயலைத் துறந்து விடவேண்டுமென்பதல்ல. ஏனென்றால், உயிர் வாழ்க்கைக்குச் செயல் இன்றியமையாதது. எனவே, எவ்வித பற்றுமின்றி, செயல் செய்து கொண்டிருப்பது தனது கடமை யென்று கருதிச் செயலைச் செய்து கொண்டு போகிறவனே துறவி.
மகாத்மா தன்மைக்குத் துறவி லட்சணங் கூறியிருக்கிறார். அப்படியே துறவுக்கு மகாத்மா லட்சணங் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் லட்சியம் என்னவென்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
இருவரும் இந்தியாவை ஒரு தொகுப்பாகவே பார்க்கிறார்கள். பாஷை வித்தியாசம், மாகாண வித்தியாசம் முதலிய வித்தியாசங்கள் இவர்கள் மனத்தில் எழுவதேயில்லை. அப்படியே இவர்கள் மதம் வேறு, வாழ்க்கை வேறாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதர்களி லும், ஏழையென்றும் பணக்காரரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவ ரென்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாவற்றையும் கடவுள் மயமாகவே காண்கிறார்கள்.
இருவரும் வெளிப்பார்வைக்குச் சுலபத்தில் அணுக முடியாத வர்கள் போல் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் கூட இவர்களிடத்திலே தாராளமாகப் பழகுகின்றன. ஏனென்றால் இவர்கள் குழந்தை உள்ளம் படைத்தவர்கள். அதனால் கபடமின்றி உரக்கச் சிரிக்கிறார்கள்; கலகலத்துப் பேசுகிறார்கள். இவர்கள் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது சகஜம். துறவி பேசுகிறபோது, அணையை உடைத்துக் கொண்டு ஆற்று வெள்ளம் புரண்டோடுவதைப் போலிருக்கும். மகாத்மா பேசுகிற போது, அடங்கியிருக்கும் ஓர் எரிமலை, தன் உள்ளிருந்து நிதான மாக நெருப்புத் துண்டங்களை மேலே வீசி எறிவது போலிருக்கும். இருவருடைய பேச்சுக்களும் கேட்பவர்களுடைய உள்ளத்தைத் திறந்துவிடும். அந்த உள்ளத்திலிருக்கும் கோழைத்தனம், மந்தம் முதலிய மாசு மறுக்கள் யாவற்றையும் கரைத்தும் எரித்தும் விடும்.
இருவரும் பகைவருக்கு அருளும் நெஞ்சமுடையவர்கள். அந்த நெஞ்சத்தில் வன்மம் என்பது இம்மியளவும் காண முடியாது; அன்புதான் துளிர்த்துக் கொண்டிருக்கும். காந்தி, தென் னாப்பிரிக்காவில் சத்தியாக் கிரகப் போர் நடத்திக் கொண்டிருந்த போது அரசாங்கச் சார்பில் இவருக்கு எதிரியாயிருந்தவர், தளபதி மட் என்பவர். இவர், சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுகிற தமது பொறுப்பை முன்னிட்டுக் காந்தியைச் சிறையிலே வைத்தார். தம்மைச் சிறையிட்டவருக்கு காந்தி என்ன பிரதி செய்தார்? சிறையிலிருந்த போழ்து என்னுடைய (மட்ஸி னுடைய) உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் அவற்றை எனக்குச் சன்மானமாக அளித்தார்! அதனை அநேக காலம் வரை நான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின்மீது நான் நிற்கத் தகுதியுடையவனல்லன் என்ற உணர்ச்சி மட்டும் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. இந்த இடத்தில் காந்தியின் சான்றாண்மைக் குணம் சிறந்து விளங்குகிறது. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு!
விவேகானந்தருடைய சுபாவமும் இப்படித்தான். இவர் உள்ளத்தில் வன்மம் என்பது அணுவளவும் கிடையாது. இவரை யாராவது தூஷித்தால் சிவ, சிவ என்பார். உடனே முகத்தில் புன்சிரிப்புத் தவழும். அப்படி என்னைத் தூஷித்ததும் கடவுள் வாக்குத் தானே என்பார். பக்கத்திலிருக்கிற சிஷ்யர்களுக்கு, இவருடைய இந்த சாந்த சுபாவத்தைக் கண்டு சிறிது கோபங்கூட உண்டாகும். அப்பொழுது இவர் சிஷ்யர்களுக்கு தூஷிக்கிற வனும் தூஷிக்கப்படுகிறவனும், புகழ்கிறவனும் புகழப்படுகிறவனும் எல்லோரும் ஒன்றே என்று உணர்ந்து கொண்டு விட்டோமே யானால் நமக்குக் கோபமே வராது என்று சாந்தமாகப் பதிலளிப்பார். எவ்வளவு உயர்ந்த மனோ நிலை!
இருவரும் குழந்தை உள்ளம் படைத்தவர்களானாலும், தமக்கு ஊறு செய்ய வந்தவர்களை மன்னித்துவிடுகிற கருணை யுடையவர் களானாலும், பொய்மை, போலித்தனம், கோழைத்தனம் முதலியவை களைக் கண்டிக்கிற விஷயத்தில் சிறிது கூடத் தயை தாட்சண்யம் காட்டாதவர்கள். உள்ளதை உள்ளபடி சொல்வதில் சிறிதும் பின் வாங்கார்; யாருக்கும் அஞ்சார்; எதற்கும் அஞ்சார்.
ஒரு சமயம் விவேகானந்தர், மைசூர் மன்னரான ஸ்ரீ சாம ராஜேந்திர உடையாரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். அமெரிக்கா சென்று பிரசித்தியடையாத காலம் அது. ஒருநாள் மன்னர், தமது ஆதானிகர் களுடன் அத்தாணி மண்டபத்தில் கொலுவீற்றிருந் தார். விவேகானந்தரும் கூட இருந்தார். அரசர், இவரைப் பார்த்து சுவாமி! என்னுடைய ஆதானிகர்களைப் பற்றித் தங்களுடைய அபிப்பிராயம் என்ன? வென்று கேட்டார். விவேகானந்தர் பதில் கூறினார்: நல்லது அரசே! உங்களுக்கு நல்ல மனம் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்ட வசமாக உங்களை ஆதானிகர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதானிகர்கள் எங்கும் ஆதானிகர்கள் தானே? இதைக் கேட்ட அரசர் திகைத்துப் போனார்; ஆதானி கர்கள் ஆத்திரமடைந்தார்கள். ஆயினும் யார் என்ன செய்ய முடியும்?
பின்னர், மகாராஜா, விவேகானந்தரைத் தமது தனியறைக்கு அழைத்துக்கொண்டு போய் சாந்தமாகச் சில வார்த்தைகள் கூறினார்: சுவாமி! இந்த மாதிரி கொஞ்சங்கூட ஒளிமறைவின்றி மனதில் தோன்றியதை அப்படி அப்படியே சொல்வீர்களாயின் தங்களுடைய உயிருக்கே ஆபத்து உண்டாகக் கூடும். தங்களை விஷமிட்டுக் கொன்றுகூட விடுவார்கள். இந்த மாதிரி அநேக சாதுக் களுக்கு நடந்திருக்கிறது. உடனே விவேகானந்தர், என்ன, என்ன! யோக்கியமான ஒரு சந்நியாசி, உண்மையைச் சொல்ல பயப்படுவான் என்று நினைக்கிறீர்களா? அதனால் அவனுக்கு என்ன தீங்குகள்தான் நேரிடட்டுமே, உயிர்தான் போகட்டுமே, சத்தியத்தினின்று பிறழவே மாட்டான். நாளைய தினமே உங்களுடைய மகன் என்னிடம் வந்து ‘என்னுடைய தகப்பனாரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்களிடத்திலே யில்லாத நற்குணங்களெல்லாம் உங்களிடத்திலே இருப்பதாகச் சொல்லலாமா? நான் அப்படிப் பொய் சொல்வதா? முகதுதி செய்வதென்பது ஆதானிகர்களுடைய வேலை. உண்மையைப் பேசுவது சந்நியாசிகளின் வேலை என்று கர்ஜித்தார். அரசர் ஒன்றும் சொல்ல முடியாமல் அடங்கிவிட்டார். ஆனால் இதே அரசரைப் பற்றிப் பிற்காலத்தில் விவேகானந்தர் எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்! எவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியிருக்கிறார்!
இன்னோர் உதாரணம். விவேகானந்தர் வடஇந்தியாவிலுள்ள ஆள்வார் சமதானத்தில் யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, அரசருடைய தொடர்பு ஏற்பட்டது. அரசனும் ஆண்டியும் நெருங்கிப் பழகினார்கள். ஒருநாள் அரசர், சுவாமி! தாங்கள் பெரிய பண்டிதர் என்று கேள்விப்படுகிறேன். மாதந் தோறும் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு சுகமாக இருக்கலாமே! ஏன் இப்படி பிட்சை யெடுத்துக்கொண்டு அலைய வேண்டும்? என்று கேட்டார். உடனே விவேகானந்தர், மகாராஜா! நீங்கள் ஏன் ராஜ்யத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு உங்களுடைய நேரத்தையெல்லாம் வெள்ளைக்காரர்களுடன் கூடிக்கொண்டு வேட்டை யாடுவதில் கழிக்கிறீர்கள்? என்று பதில் கேள்வி கேட்டார்.
பக்கத்திலிருந்தவர்கள் பிரமித்துப் போனார்கள். ஆனால் மகாராஜா அந்த வார்த்தைகளைப் புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டு நிதானமாக ஏன் இப்படிச் செலவழிக்கிறேன் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இப்படிச் செலவழிப்பதை நான் விரும்புகிறேன் என்றார். நான் கூட அதே காரணத்திற்காகத்தான் சந்நியாசியாகத் திரிகிறேன் என்றார் விவேகானந்தர்.
இந்த ஆள்வார் மன்னருக்கும் விவேகானந்தருக்கும் இன்னொரு நாள் விக்கிரக ஆராதனையைப் பற்றி விவாதம் நடைபெற்றது. மகாராஜா, மண்ணையும் கல்லையும் உருவங்களாகச் சமைத்து அவைகளிலே கடவுள் இருப்பதாகச் சொல்லிக் கும்பிட்டு விழுவதை ஏளனம் செய்து, விக்கிரக ஆராதனையில் தமக்குச் சிறிதுகூட நம்பிக்கையில்லை யென்று தெரிவித்துக் கொண்டார். இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கே சுவரில் அரசருடைய பெரிய படம் ஒன்று மாட்டப் பட்டிருந்தது. அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வரும்படிச் சொன்னார் விவேகானந்தர். அப்படியே படம் கொண்டுவரப்பட்டது. பக்கத்திலிருந்த திவானைக் கூப்பிட்டார் விவேகானந்தர்.
“இது யாருடைய படம்?”
“எங்கள் அரசருடைய உருவம் வரைந்திருக்கிற படம்.”
“இதன் மீது காரி உமிழுங்கள். இங்குள்ளவர் யார் வேண்டு மானாலும் இதன்மீது எச்சில் துப்பலாம். இஃதென்ன ஒரு காகிதந் தானே? உங்களுக்கென்ன ஆட்சேபம்?”
அரசருக்கும் அவர் பரிவாரங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் வற்புறுத்தினார் விவேகானந்தர். திவான் சொன்னார்: என்ன சுவாமி இது? எங்களுடைய மகாராஜாவின் உருவமல்லவோ இதில் இருக்கிறது என்றார். விவேகானந்தர், வாதவம். ஆனால் மகாராஜர், சதையும் ரத்தமுமான உடலோடு இதில் இருக்கவில்லை. இதில் அவருடைய நிழல்தான் இருக்கிறது. மகாராஜாவைப் போல் இது பேசுவதுமில்லை; அசைவது மில்லை. ஆனாலும் இதன் மீது எச்சில் துப்பினால், உங்கள் மகாராஜாவை அவமானப்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இதைப் போல்தான் விக்கிரக ஆராதனையும். கடவுளின் சாயல், அவரவர் வழிபடும் உருவங்களில் இருப்ப தாக பக்தர்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார். என்ன தைரியம்! துறவிக்கு வேந்தன் துரும்பு!
1916ஆம் வருஷம் ஸ்ரீ காசியில் ஹிந்து சர்வ கலாசாலையின் கால் கோள் விழா நடைபெறுகிறது. ராஜப் பிரதிநிதியான லார்ட் ஹார்டிஞ்சும், மற்றச் சுதேச மன்னர்களும் ஆடம்பர கோலத்துடன் வீற்றிருக்கிறார்கள். அப்பொழுது காந்திக்குப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்ன சொன்னார்?
நேற்றைய தினம் நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்த மகாராஜர், இந்தியாவின் ஏழ்மை நிலையைப் பற்றிக் கூறினார். மற்றவர்களும் இதை வலியுறுத்திச் சொன்னார்கள். ஆனால் இங்கே நாம் என்ன காண்கிறோம்? ஆடம்பரமான காட்சி! பாரிஸிலிருந்து ஒரு நகை வியாபாரி வந்தால், அவனுடைய கண்களுக்கு விருந் தளிக்கக் கூடிய மாதிரி, எல்லோரும் சிறந்த ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கிற காட்சி! இந்தப் பிரபுக்களோடு, இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழை மக்களை ஒப்பிட்டுப்பார்க்கிறேன். அப் பொழுது இந்தப் பிரபுக்களைப் பார்த்து இந்த நகைகளையெல் லாம் கழற்றி, இந்திய மக்களின் சார்பாக இவைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள்; அப்படிச் செய்யாவிட்டால் இந்தியாவுக்கு விமோசனமே கிடையாது என்று சொல்லவேண்டுமென்கிற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது.
அப்பொழுதுதான், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு வந்திருக்கிறார் காந்தி. இந்திய அரசியல் அரங்கத்தில் இவருக்கு இன்னும் ஒரு தலைமை தானம் ஏற்படவில்லை. ஆயினும், தமது வருங்காலப் பெயர், புகழ் எல்லாவற்றையும் கவனியாமல், தமது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டார். அந்தக் காலத்தில் இவருடைய இந்தப் பேச்சு எவ்வளவு பரபரப்பை உண்டு பண்ணியது!
வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வருகிற இந்தியர்கள் பலரும், தங்களோடு என்ன கொண்டு வருகிறார்கள்? பணம், பட்டம், பதவி முதலியன. இவையொன்றும் அதிகமாக இல்லா விட்டாலும் மேனாட்டு மனைவியர்! காந்தியும் விவேகானந்தரும் இந்தியாவுக்குத் திரும்புகிற போது என்ன கொண்டு வந்தார்கள்? கீர்த்தி! மேனாட்டுச் சிஷ்யர்கள்! சுக போகத்திலே வாழ்ந்த பலர், இந்த இருவருடைய எளிய வாழ்க்கையிலும் மகத்தான சக்தியிலும் ஈடுபட்டு இவர்களுக்குச் சிஷ்யர்களாகி இவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தார்கள். இங்ஙனம் அர்ப்பணம் செய்தவர்களிலே சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் பெண்களே!
காந்தியும் விவேகானந்தரும் பெண்மைக்குப் பெருமை கொடுக் கிறவர்கள். உலகத்திலேயே தாயின் நிலைதான் மிகச் சிறந்தது. தன்னலமின்மையை, இந்த ஓர் இடத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்; அனுஷ்டிக்க முடியும். கடவுளன்புக்கு அடுத்தபடியாகவுள்ளது தாயன்பு; மற்றவையெல்லாம் இதற்குக் கீழ்ப்பட்டதுதான் என்று தாய்மைக்குப் பக்தி செலுத்துகிறார் விவேகானந்தர். இப்படிப்பட்ட தாய்மார் பலரையும் தங்களுடைய சிஷ்யர்களாகக் கொண்டார்கள், ஒரு மகாத்மாவும் ஒரு சந்நியாசி யும். விவேகானந்தருக்கு சகோதரி நிவேதிதை அமைந்ததைப் போல் காந்திக்கு மீராபாய்! இவர்கள் போன்ற இன்னும் பலர்.
இவர்கள் தங்கள் குருமார்களுக்கு என்னென்ன விதங்களில் பணி விடைகள் செய்திருக்கிறார்கள்! துணி துவைத்திருக்கிறார்கள்; பாத்திரங் களைக் கழுவி இருக்கிறார்கள். இவர்கள் சிஷ்யைகளாக இருந்த போதிலும், கூடவே தங்கள் குருமார்களுக்கு சிசுருஷை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள்; தாய்மார்களாக இருந்து அவர்களைக் காப்பாற்றி வந்தார்கள்!
இந்த இரண்டு குருமார்களும் தங்களுடைய சிஷ்ய வருக்கத் தினரிடத்தில் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! தங்கள் கையினாலேயே சமைத்துப் போட்டிருக்கிறார்கள்; அவர்கள் நோயுற்ற போது சிகிச்சை செய்திருக்கிறார்கள்; பொதுவாக அவர் களுடைய சுயமதிப்பு உணர்ச்சிக்குப் பங்கம் ஏற்படாதபடி அவர் களை நடத்தி வந்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தந்தையாக நடந்து வந்திருக்கிறார்கள்.
இருவரும் பரம்பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டவர் களேயானாலும், உலக ஞானம் நிறையப் பெற்றவர்கள். இயற்கை யழகையும் செயற்கை வாழ்க்கையையும் ஒரே மாதிரியாக அனுப விக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
இருவரும் ஆசிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆசிரமங்கள் கர்ம க்ஷேத்திரமாகவும், யோக பூமியாகவும் விளங்கு கின்றன. இந்தியாவின் பிற்கால சரித்திரத்தில், இந்த ஆசிரமங்கள் செய்து வருகிற வேலை முக்கிய இடம் பெறும். ஏனென்றால் இந்தியாவின் எதிர்கால வாழ்வைப் பண்படுத்துவன அல்லவோ இவை?
துறவைப் பெருமைப்படுத்திவிட்டார் விவேகானந்தர். சிறையைப் புனிதப்படுத்திவிட்டார் காந்தி. இருவரும் அரண்மனை களில் கொண்டாடப்படுகிறார்கள்; குடிசைகளில் வாழ்கிறார்கள். முன்னவர் இறந்து வாழ்கிறார்; பின்னவர் இருந்து வாழ்கிறார். இந்தியா என்ற பெயர் உள்ள வரையில் இப்பெரியார் இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!
மனிதனாயிரு!
“அரிது அரிது மானிடராதல் அரிது” என்றார் நமது நாட்டுப் பெரியார் ஒருவர். எவ்வளவு ஆழ்ந்த கருத்துடைய வாசகம் இது? மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று அவர் சொல்லவில்லை; மானிடர் ஆதல் அரிது என்றே சொன்னார். மனிதனாகப் பிறந்து விட்டால் மட்டும் போதுமா? மனிதனாக இருக்க வேண்டும், மனிதனாக வாழவேண்டும். இதற்குத் துணை செய்வதுதான் மதம். இந்த மதத்தையே விவேகானந்தர் வலியுறுத்துகிறார். இந்தியாவிலே நான் மனிதர்களைச் சிருஷ்டிக்க வேண்டும் என்று ஓரிடத்தில் கூறு கிறார். பகுத்தறிவு படைத்த மனிதன், தனது சக்திகளைப் பிறர்க்குப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாகத்தான் அவன் வளர்கிறான். இந்த வளர்ச்சிக்கான ஒரு சாதனமே மதம். அப்படியிருக்க இந்த மதத்தை, வாழ்க்கையிலிருந்து எப்படிப் பிரிக்க முடியும்?
நாட்டைவிட்டுக் காட்டுக்கு ஓடிவிடுவது மதமாகாது. மூக்கைப் பிடித்துக்கொண்டு மூலையிலே உட்கார்ந்திருப்பது மதமாகாது. இவை களினால் கடவுளைக் காணவும் முடியாது. நம்மைச் சுற்றி எங்கும் கடவுள் இருக்கிறார், ஒவ்வொரு ஜீவ ராசியி னிடத்திலும் இருக்கிறார், விளையாட்டிலும் வினையிலும் இருக் கிறார், அழுகையிலும் சிரிப்பிலும் இருக்கிறார், இப்படி எங்கும் இருக்கிறார், எதிலும் இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இந்த நம்பிக்கையிருக்கிறவன்தான், உலகத்தில் மேலான காரியத்தைச் செய்ய முடியும். இந்த நம்பிக்கையை யூட்டுவதுதான் மதம்.
மதத்தின் மேற்பரப்பிலுள்ள சில அமிசங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவைகளையே மதமாகக் கொண்டுவிட்டது இந்தியா சில நூற்றாண்டுகளாக. இந்த எண்ணத்தைத் தொலைத்து, மதத்தின் உண்மையான தத்துவங்களை வெளிக்கொணர்ந்து காட்டினார் விவேகானந்தர். பரலோகத்தை நம்பி இகலோகத்தை விட்டுவிடக் கூடாதென்று போதித்தார். உடல் வலிமையும் வேண்டும், உள்ளத்துறவும் வேண்டுமென்று கூறினார். இந்தியா வுக்கு இலாமிய தேகமும் வேதாந்த மூளையும் தேவை என்று இவர் கூறியதன் தாத்பரியம் இதுதான். நடமாடுங் கோயில்கள் நலிந்து கிடக்க, படமாடுங் கோயில்களுக்குச் சென்று பூஜை போடு வதில் யாருக்கு என்ன நன்மையென்று கேட்கிறார்.
இவருடைய உபதேசங்களிலிருந்து சில மணிகளைப் பொறுக்கியெடுத்துக் கீழே தருகிறோம்:
மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதனைத் தெய்வ மாக்குவதும் மதம்.
மனிதன், இயற்கையை வெல்வதற்காகப் பிறந்தானேயொழிய, அதனைப் பின்பற்றிக்கொண்டு செல்வதற்காக அல்ல.
உலகமென்பது ஓர் உடற்பயிற்சி சாலை. அதில் நாம், நம்மைப் பலசாலிகளாக்கிக்கொள்ளவே வந்திருக்கிறோம்.
கடவுள் மனிதனாகிவிட்டார்; மனிதன், மறுபடியும் கடவு ளாகக் கூடும்.
கடவுளிடத்தில் நம்பிக்கை கொள்ளாதவனையே நாதிகன் என்று பழைய மதங்கள் கூறின. தன்னம்பிக்கை இல்லாதவனே நாதிகன் என்று இந்தக் காலத்து மதம் கூறுகிறது.
உண்மைக்காக நாம் எதையும் தியாகம் செய்துவிடலாம்: ஆனால் எதற்காகவும் நாம் உண்மையைத் தியாகஞ் செய்யக்கூடாது.
எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்து. துன்பத்திலே உழன்றுகொண்டிருக்கிறவர்களுக்கு இரக்கங்காட்டு. யாரிடத்திலும் பொறாமை கொள்ளாதே. மற்றவர்களிடத்தில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்பதைப் பாராதே.
எவனுடைய மனமெனும் புத்தகம் திறக்கப்பட்டுவிட்டதோ அவன் வேறு நூல்களைப் பயில வேண்டியதேயில்லை.
உங்களுடைய முப்பத்து மூன்றுகோடி தேவர்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கையிருக்கலாம்; இன்னும் அந்நியர்கள் புகுத்தி யுள்ள மற்ற எல்லாத் தெய்வங்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கை யிருக்கலாம். ஆனால் உங்களிடத்திலேயே உங்களுக்கு நம்பிக்கை யில்லாவிட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; அதன் மீது நில்லுங்கள்.
உன்னுடைய விமோசனத்தைமட்டும் நீ தேடிக் கொள்வா யானால் உனக்கு நரகந்தான் கிடைக்கும்.
எனது நாட்டில் பட்டினியோடு ஒரு நாய் இருக்கிறவரையில், அதற்கு உணவளிப்பதுதான் என்னுடைய மதம்.
உண்மையான மதத்தில், புதகப் படிப்புக்கு இடமேயில்லை.
ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு தேசமோ தன்னம்பிக்கை யிழந்து விடுமானால் மரணம் சம்பவிப்பது நிச்சயம். முதலில் உங்களை நம்புங்கள்; பிறகு கடவுள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
இந்தியாவை இனி யாரும் அடக்க முடியாது. இனியும் அது தூங்கப்போவதில்லை. அந்நிய சக்திகள் எவையும் இனி அதனைப் பின்னுக்கு இழுக்காது. காலங்கடந்த இந்தியா, இப்பொழுது எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டது.
நீ ஏதாவது தீங்கு செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால், அதை உன்னைவிட மேலானவர்கள் முன் செய்.
இந்தியாவின் விமோசனம், இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய பலத்தை உணர்வதிலே, தன்னிடம் தெய்வசக்தி இருக்கிறதென்பதை உணர்வதிலே இருக்கிறது.
மானிட சமூகத்திற்கு நன்மை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள், தங்களுடைய சொந்த சுக துக்கங்களையும், பெயரையும் புகழையும், மற்றச் சுயநலங்கள் யாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டிச் சமுத்திரத்திலே எறிந்துவிட்டுக் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கவேண்டும்.
எனக்கு நானே நன்மையைச் செய்துகொண்டு ஒரு மோட்சத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், மற்றவர்களுக்கு நன்மைசெய்து அது காரணமாக ஆயிரம் நரகங்களுக்குச் செல்ல நான் தயாராயிருக்கிறேன்.
கடவுள் ஒருவர்தான் கொடுக்கக்கூடியவர்; உலகமெல்லாம் சந்தைக்கடை. அவரிடமிருந்து செக்கைப்பெற்றுக் கொள்ளுங்கள். அஃது எங்கும் மாறும்.
உலக சரித்திரம் என்பது என்ன? தன்னம்பிக்கை கொண் டிருந்த ஒரு சிலருடைய சரித்திரந்தான். அந்தத் தன்னம்பிக்கை, மனிதனிடத்திலேயுள்ள தெய்வசக்தியைத் தூண்டிவிடுகிறது. அப்பொழுது எது வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.
கடவுளைத் தேடிக்கொண்டு நீ எங்கே போக வேண்டும்? ஏழைகள், துன்பப்படுவோர், பலவீனர் இவர்களெல்லோரும் கடவுளர்களல்லவா? அவர்களை முதலில் வணங்கக்கூடாதா? கங்கைக் கரையில் ஏன் கிணறு வெட்ட வேண்டும்? ஜன சமுதாயமே உன்னுடைய கடவுள். ஜனங்களைப் பற்றி நினை; அவர்களுக்காக வேலை செய்; அவர்களுடைய நலனுக்காக இடைவிடாது பிரார்த் தனை செய். கடவுள் உனக்கு வழி காட்டுவார்.
ஓ இந்தியாவே! மற்றவர்களுடைய குரலுக்கு எதிரொலி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்; மற்றவர்களைப் பார்த்து நடிக்கிறாய்; பிறரைச் சார்ந்து நிற்கிறாய்; அடிமைத்தனமான பலவீனம் உன்னிடம் இருக்கிறது; கீழ்த்தரமான கொடிய பழக்க வழக்கங்களை அனுஷ்டிக்கிறாய். இவைகளைக் கொண்டு, இந்தச் சாதனங்களைக் கொண்டு நாகரிகத்தின் பெருமையை எப்படி அடையப் போகிறாய்? வீரர்களுக்கே உரியது சுதந்திரம். அப்படிப் பட்ட சுதந்திரத்தை, உன்னுடைய கேவலமான கோழைத்தனத் தினால் எப்படியடையப் போகிறாய்? ஓ இந்தியாவே! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே; நீ வணங்குகிற கடவுள், துறவிகளுக்கெல்லாம் பெரிய துறவி, சர்வ சங்க பரித்தியாகியான சங்கரன், உமாபதி என்பதை மறவாதே; உனது விவாகம், உனது செல்வம், உனது வாழ்க்கை எல்லாம் சிற்றின்ப சுகத்திற்காக அல்ல, உன்னுடைய சொந்த சந்தோஷத்திற்காக அல்ல என்பதை மறவாதே; ஜகன்மாதாவின் பலி பீடத்திலே பலியாவதற்காக நீ பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே; உனது சமுதாய அமைப்பு, எல்லையற்ற உலகத் தாய்மையின் பிரதிபலிப்பு என்பதை மறவாதே; தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படுகிற அறிவில்லாதவர்கள், ஏழைகள், பாமரர்கள், சக்கிலி, தோட்டி முதலிய எல்லோரும் உன்னுடைய சதையும் ரத்தமுமானவர்கள், உன்னுடைய சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே! தைரியங்கொள்; துணிவு கொள்; நீ ஓர் இந்தியன் என்பதற்காகப் பெருமை கொள். நான் ஓர் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன் என்று பெருமை யோடு முழக்கம் செய்! பாமர இந்தியன், ஏழை இந்தியன், நிர்க்கதியாயுள்ள இந்தியன், பிராமண இந்தியன், பறைய இந்தியன் ஆகிய ஒவ்வொருவனும் என்னுடைய சகோதரன் என்று சொல்லு. நீ கூட இடுப்பிலே ஒரு கந்தைத் துணியைக் கட்டிக்கொண்டு உரத்த குரலெடுத்து ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன், ஒவ்வொர் இந்தியனும் என்னுடைய உயிர், இந்தியாவின் தெய்வங் களெல்லாம் என்னுடைய கடவுள், இந்திய ஜன சமுதாயம் எனது குழந்தைப் பருவத்தின் தொட்டில், இளமையின் உத்தியானவனம், புனிதமான மோட்சலோகம், முதுமைப் பருவத்தின் காசி க்ஷேத்திரம் என்று சொல்லு. சகோதரா! இந்தியாவின் மண் என்னுடைய மேலான மோட்சலோகம்; இந்தியாவின் நன்மையே என்னுடைய நன்மை என்று சொல்லு; அடிக்கடி சொல்லு. தினந்தோறும், இரவு பகலாகப் பின்வருமாறு பிரார்த்தனை செய்: ஓ! கௌரீநாதா! ஜகன்மாதா! எனக்கு ஆண் தகைமையைக் கொடு! ஓ! வலிமையின் தாயே! எனது பலவீனத்தை எடுத்துக் கொண்டு விடு; எனது அபௌருஷத்தை எடுத்துக் கொண்டு விடு; என்னை ஒரு மனிதனாக்கு!
தொண்டு செய்!
உண்மையென்றால் என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் வேற்றுமையற்று ஒன்றாகிவிடுமானால் அதற்கு ஒரு தனிப் பெயருண்டல்லவா? அது தான் உண்மை. உண்மையுள்ள இடத்திலே ஆடம்பரமில்லை; ஆரவாரமில்லை; அச்சமில்லை; அறியாமையில்லை. காந்தி, இந்த உண்மையை நாடிச்செல்லும் ஒரு பிரயாணி. பிரயாணமாவது யாது? அதுதான் தொண்டு; பற்றற்ற சேவை.
அந்தத் தொண்டு மௌனமானது. அதற்கு வாயில்லை; மனமுண்டு. அதன் உடலிலே நகையில்லை; ஆனால் முகத்திலே நகையுண்டு. அதற்கு அடக்கத் தெரியாது; அடங்கத் தெரியும். அது செயலிலே ஓய்வைக் காணும்; பிறர்துன்பத்தைப் பரிகரிப் பதிலே இன்பம் நுகரும். அது ஜாதி, மத, நிற வேற்றுமைகளைக் கடந்தது; கடமையிலே கண்ணுங் கருத்து முடையது.
காந்தியின் வாழ்க்கை, உண்மையைக் குறிக்கோளாகக் கொண்டது. சேவையை, அதனையடையும் மார்க்கமாகவுடையது. தொண்டு செய், தொண்டு செய் என்றே அவர் உபதேசிக்கிறார். சேவையின் கீதமாகவே அவருடைய கைராட்டினம் ஒலிக்கிறது. அவரது மணிமொழிகளில் சில வருமாறு:
இரும்பு விலங்குகளைக் காட்டிலும், பொன் விலங்குகள்தான் கேவலமானவை யென்பது என் கருத்து. ஏனென்றால், இரும்பு விலங்கு களின் உபத்திரவத்தை நாம் உணர்கிறோம். பொன் விலங்குகளோ, நமது நிலையை உணராமற் செய்துவிடுகின்றன.
சந்தோஷமாகச் செய்கிற தியாகத்திற்குத் தான் மதிப்பு உண்டு. முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு தியாகம் செய்வதில் அர்த்தமே யில்லை. தன்னுடைய தியாகத்திற்கு எவனொருவன் அநுதாபத்தை எதிர்பார்க்கிறானோ அவன் வெகு சாதாரண மானவன்.
உண்மையைக் கடைப்பிடிப்பதென்பது ரோஜாப்பூக்கள் பரப்பிய படுக்கையாயிருந்தால், அதனாலே எவ்வித சிரமமும் இல்லையென்றால், சுகமாகவும், சுலபமாகவும் இருந்தால், அதில், அந்த உண்மையைக் கடைப்பிடிப்பதில், அழகேயிராது.
நீங்கள் தேசபக்தர்களாக வேண்டுமானால், ஏழைகளின் நலத்திற்குப் பாடுபடவேண்டுமானால், முதலில் உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
வானிடிந்து வீழ்ந்தபோதிலும் நாம் உண்மையைப் பின்பற்ற வேண்டும்.
நமது சகோதர மக்களுக்குத் தொண்டு செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்கு நாம் எப்பொழுதும் விழிப்புடையவர் களாக இருக்க வேண்டும். இருளும் ஒளியும் சதா மனிதனுடைய இருதயத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், இருளின் வலிமைக்கு மனிதன் இரையாகாம லிருக்க வேண்டுமானால் அவன் பிரார்த்தனையிலேயே அடைக்கலம் புக வேண்டும்.
மனிதத்தன்மையென்பது வீண் பேச்சிலோ, அதிகார தோரணை யிலோ இல்லை. சமுதாயத்துறையிலோ, அரசியல் துறையிலோ, பிறதுறைகளிலோ, எது சரியென்று தோன்றுகிறதோ அதனை, அதன் பலாபலன்களை எதிர்பாராமல் செய்கிற துணிவிலே தான் இருக்கிறது. மனிதத்தன்மையென்பது சொல்லிலே இல்லை; செயலிலேயே இருக்கிறது.
எவன், தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனே சுதந்திர புருஷன்.
சுயராஜ்யம், கோழைகளுக்கல்ல; சிரித்துக் கொண்டே தூக்கு மேடையில் ஏறத்தயாராயிருக்கிறவர்களுக்குத்தான்.
சாசுவதமான ஏதோ ஒன்றை நாம் சாதிக்க வேண்டுமானால், முதலில் நமக்குத் தேவையானது அஞ்சாமை. மத உணர்ச்சி யில்லாமல் இதனை நாம் அடையமுடியாது. கடவுளுக்கு அஞ்சு வோம்; மனிதனிடத்தில் நமக்குள்ள அச்சம் தானாகவே போய்விடும்.
லட்சியத்தை முன்னிட்டு நடைபெற்றிருக்கிற எந்தப் போராட்டத் திலும் இதுவரை எண்ணிக்கை முக்கியமாகக் கருதப் படவில்லை. போராட்டத்தின் தன்மைதான், அதன் முடிவை நிர்ணயிக்கிறது. உலகத்து மகாபுருஷர் பலரும் தனிப்பட்டு நின்றே போராடியிருக்கிறார்கள்.
சிலர், தங்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்கிறார்கள். இஃது எப்படியிருக்கிறதென்றால் நான் மூச்சு விடுகிறேன்; ஆனால் எனக்கு மூக்கு இல்லை என்று சொல்வதைப் போலிருக்கிறது.
தன்னிடத்திலேயுள்ள தெய்வசக்தியை அறிய வேண்டுமென்ற ஆவலுடையவன் கட்டாயம் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும்.
பிரார்த்தனையின் போது, இருதயமில்லாத வார்த்தைகளைக் காட்டிலும், வார்த்தையில்லாத இருதயமே தேவை.
நம்பிக்கையும் தெய்வப் பிரார்த்தனையும் கலவாத வேலை, வாசனையில்லாத செயற்கை மலர் மாதிரி.
மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகிறாய் என்றால் அதை நீ எப்படிக் காட்ட வேண்டும்? அவர்களைப் புகழ்வதனாலேயல்ல; அவர்களுக்குத் தொண்டு செய்வதனால்.
எவன், ஜனங்களுக்குத் தொண்டு செய்வதில் தலை சிறந்தவனாயிருக்கிறானோ அவனே உண்மையான அரசன். ஒரு ராஜ்யத்திற்கு ஜனங்களே உண்மையான எஜமானர்கள்.
விழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் சுயராஜ்யம்; தூங்கிக்கொண்டிருக்கிறவர்களுக்கும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களுக்கு மல்ல.
ஜனங்களுக்குத் தன்னலமற்ற தொண்டு செய்வதிலேயே அஹிம்ஸை விகாசமடைகிறது. அந்த விகாசத்தின் அடையாளமே கைராட்டினம்.
மதமானது, கடவுளோடு மனிதனையும், மனிதனோடு மனித னையும் பிணைக்குஞ் சக்தியுடையது.
நம்முடைய கடமைகளை நாம் செய்து கொண்டு போனால் உரிமைகள் தாமாகவே வந்து சேரும்.
அஹிம்ஸை யென்பது ஒரு சாதிரம். அதில் தோல்வி என்பதற்கு இடமேயில்லை.
உலகத்தில் யாராரை நாம் இப்பொழுது மகான்களென்று கொண்டாடுகிறோமோ அவர்களெல்லோரும் தங்கள் சேவையி னாலேயே அந்த மகான் பதவியையடைந்திருக்கிறார்கள்.